

மதுபானங்கள் கொள்முதலில் புதிய நடைமுறையை ‘டாஸ்மாக்' நிர்வாகம் தொடங்கி உள்ளது.
தமிழகத்தில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட 'டாஸ்மாக்' கடைகள் மூலம் மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இந்த கடைகளில் விற்பனை செய்யப்படும் மதுபான வகைகளை 11 நிறுவனங்களிடம் இருந்தும், 'பீர்' வகைகள் 6 நிறுவனங்களிடம் இருந்தும் 'டாஸ்மாக்' நிர்வாகம் கொள்முதல் செய்கிறது.
இதில் பிரபல அரசியல் கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் நடத்தும் நிறுவனங்களும் அடங்கும். எந்த நிறுவனத்தின் மதுபானம் அதிகம் விற்பனையாகிறதோ, அவை கூடுதலாக கொள்முதல் செய்யப்பட்டன. அதாவது குறிப்பிட்ட நிறுவனங்களின் மது வகைகள் மட்டும் 60 முதல் 70 சதவீதம் வரையில் கொள்முதல் செய்யப்பட்டது.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு த.வெ.க. அரசு அமைந்தவுடன் 'டாஸ்மாக்' நிர்வாகம் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி கடந்த 6-ந் தேதி அன்று 'டாஸ்மாக்' நிர்வாக கூட்டம் நடைபெற்றது. இதில் குறிப்பிட்ட சில நிறுவனங்களிடம் இருந்து மட்டும் அதிகளவு மதுபானங்களை கொள்முதல் செய்யாமல் அனைத்து நிறுவனங்களிடம் இருந்தும் சரிசமமாக மதுபானங்கள் கொள்முதல் செய்ய வேண்டும் என்று முடிவு எடுக்கப்பட்டது.
அதன்படி அனைத்து நிறுவனங்களிடம் இருந்து சரிசமமாக மதுபானங்கள் கொள்முதல் செய்யப்பட்டு வருகின்றன. உயரக மதுபானங்கள் விற்பனை செய்யப்படும் 'எலைட்' கடைகளில் பிரீமியம், மீடியம் ரக மதுவகைகளில் ஒரு பெட்டி கட்டாயம் விற்பனை செய்ய வேண்டும் என்றும் உத்தரவு வழங்கப்பட்டு உள்ளது.
'டாஸ்மாக்' கடைகளில் விற்பனை செய்யப்படும் சாதாரண ரக மதுபான வகைகளை அனைத்து மதுபான உற்பத்தி நிறுவனங்களிடம் இருந்து சமமாக கொள்முதல் செய்தால், மதுபிரியர்கள் விரும்பும் மது வகைகளுக்கு தட்டுப்பாடு ஏற்படும். இது மறைமுகமாக குறிப்பிட்ட நிறுவனத்தின் மதுவகைகளை அதிகளவில் கொள்முதல் செய்வதற்கு புறவழி செயல் போன்று அமைந்துவிடும். மதுபிரியர்கள் விரும்பாத மதுபானங்கள் விற்பனையாகாமல் அப்படியே கடையில் தேங்கிவிடும்' என்பது 'டாஸ்மாக்' ஊழியர்களின் கருத்தாக உள்ளது.
புதுச்சேரி போன்று அண்டை மாநிலங்களில் விற்கப்படும் வெளிநாட்டு மதுபான வகைகளையும் 'டாஸ்மாக்' நிர்வாகம் கொள்முதல் செய்து விற்பனை செய்ய வேண்டும் என்பது மதுபிரியர்களின் விருப்பமாக இருக்கிறது.