நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்- அ.தி.மு.க.வுக்கு என்.ஆர்.தனபாலன் ஆதரவு

சட்டமன்ற தேர்தலில் பொய்யான வாக்குறுதிகளை நம்பி வாக்களித்த தமிழக மக்கள் செய்த தவறை மீண்டும் செய்வதற்கு தயாராக இல்லை என்பது வரும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் நிரூபணம் ஆகும்.
ஓ.பன்னீர்செல்வத்தை பெருந்தலைவர் மக்கள் கட்சித் தலைவர் என்.ஆர்.தனபாலன் சந்திப்பு
ஓ.பன்னீர்செல்வத்தை பெருந்தலைவர் மக்கள் கட்சித் தலைவர் என்.ஆர்.தனபாலன் சந்திப்பு
Published on

சென்னை:

தமிழகத்தில் வருகிற 19-ந் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணிக்கு பெருந்தலைவர் மக்கள் கட்சி தனது ஆதரவை தெரிவித்துள்ளது.

அ.தி.மு.க. வேட்பாளர்களின் வெற்றிக்கு உறுதுணையாக பாடுபடுவது என்று பெருந்தலைவர் மக்கள் கட்சி எடுத்த தீர்மானத்தின் அடிப்படையில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை பெருந்தலைவர் மக்கள் கட்சித் தலைவர் என்.ஆர்.தனபாலன் நேரில் சந்தித்து ஆதரவு கடிதத்தை வழங்கினர்.

அவருடன் மாநில தலைமை நிலைய செயலாளர் ஆர்.சிவகுமார், செய்தித் தொடர்பாளர் ஜி.சந்தானம், சென்னைமேற்குமாவட்ட தலைவர் எம்.வைகுண்ட ராஜா ஆகியோர் உடன் சென்றனர்.

பின்னர் என்.ஆர்.தனபாலன் நிருபர்களிடம் கூறியதாவது:-

தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தபடி சமையல் கியாஸ் சிலிண்டர் மானியம் வழங்காமை, குடும்ப பெண்களுக்கான மாத உதவித்தொகை வழங்காமை, பொங்கல் பண்டிகையில் இலவச தொகுப்பில் முறைகேடு, சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, அரசு அதிகாரிகளுக்கு பாதுகாப்பின்மை இதுபோன்ற ஏராளமான தவறுகளால் ஆட்சியாளர்கள் மீது பொதுமக்களின் அதிருப்தி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

ஏற்கனவே சட்டமன்ற தேர்தலில் பொய்யான வாக்குறுதிகளை நம்பி வாக்களித்த தமிழக மக்கள் செய்த தவறை மீண்டும் செய்வதற்கு தயாராக இல்லை என்பது வரும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் நிரூபணம் ஆகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com