டெண்டர் ஒதுக்கீட்டில் முறைகேடு புகார்: எடப்பாடி பழனிசாமி மீதான வழக்கு ஆகஸ்டு 2-ந்தேதிக்கு ஒத்திவைப்பு

முதல்வராக பதவி வகித்த எடப்பாடி பழனிசாமி, தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து டெண்டர்களை வழங்கியுள்ளார் என குற்றம் சாட்டப்பட்டு இருந்தது.வழக்கை கடந்த 2018-ம் ஆண்டு விசாரித்த சென்னை ஐகோர்ட்டு நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா, வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டிருந்தார்.
டெண்டர் ஒதுக்கீட்டில் முறைகேடு புகார்: எடப்பாடி பழனிசாமி மீதான வழக்கு ஆகஸ்டு 2-ந்தேதிக்கு ஒத்திவைப்பு
Published on

சென்னை:

தமிழகத்தில் கடந்த அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் நெடுஞ்சாலைப் பணிகளை மேற்கொள்ள நடைபெற்ற டெண்டர் ஒதுக்கீட்டில் ரூ.4,800 கோடி அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டது.

இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடக்கோரி தி.மு.க. சார்பில் ஆர்.எஸ்.பாரதி எம்.பி., சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இருந்தார்.

குறிப்பாக ஒட்டன்சத்திரம்-தாராபுரம்-அவினாசி பாளையம் நான்கு வழிச்சாலைக்கான திட்ட மதிப்பீடு ரூ.713.34 கோடியாக இருந்த நிலையில், அந்த திட்டத்துக்கான நிதி ரூ.1,515 கோடியாக உயர்த்தப்பட்டு அதற்கான ஒப்பந்தம் எடப்பாடி பழனிசாமியின் உறவினரான ராமலிங்கம் என்பவருக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது.

நெல்லை-செங்கோட்டை-கொல்லம் நான்கு வழிச்சாலையை விரிவுப்படுத்தி பலப்படுத்தும் ரூ.720 கோடிக்கான ஒப்பந்தம், வெங்கடாஜலபதி அன்ட்கோ என்ற நிறுவனத்துக்கு வழங்கப்பட்டு உள்ளது. மேலும் இதே நிறுவனத்துக்கு ரூ.200 கோடி மதிப்புள்ள மதுரை ரிங் ரோடு ஒப்பந்தமும் வழங்கப்பட்டு உள்ளது.

முதல்வராக பதவி வகித்த எடப்பாடி பழனிசாமி, தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து இந்த டெண்டர்களை வழங்கியுள்ளார் என குற்றம் சாட்டப்பட்டு இருந்தது.

இந்த வழக்கை கடந்த 2018-ம் ஆண்டு விசாரித்த சென்னை ஐகோர்ட்டு நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா, வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டிருந்தார். இந்த தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை கடந்த 2018-ம் ஆண்டு விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள், சி.பி.ஐ. விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தனர்.

நீண்ட காலமாக நிலுவையில் உள்ள இந்த வழக்கை விரைந்து விசாரணைக்கு பட்டியலிடக் கோரி தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி என்.வி.ரமணா முன்பு நேற்று முறையீடு செய்யப்பட்டது.

இதையடுத்து எடப்பாடி பழனிசாமி மீதான டெண்டர் முறைகேடு வழக்கு சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி அமர்வில் இன்று (செவ்வாய்க்கிழமை) விசாரணைக்கு வந்தது.

அப்போது ஆர்.எஸ். பாரதி தரப்பில், 'இந்த வழக்கில் தங்களது வக்கீலை மாற்ற வேண்டி இருப்பதால் தங்களுக்கு 3 வார கால அவகாசம் தர வேண்டும்' என்று கோரப்பட்டது.

அதே போல் எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான வக்கீல், 'இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வரும் என்பது தொடர்பான தகவல் எங்களிடம் பகிரப்படவில்லை. எனவே நாங்கள் விசாரணைக்கு தயாராகவில்லை. எனவே எங்களுக்கும் அவகாசம் வேண்டும்' என்று கூறினார்.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள் வழக்கு விசாரணைக்கு 3 வாரம் கால அவகாசம் அளிக்க முடியாது என்று கூறினார்கள். மேலும் வழக்கை வருகிற ஆகஸ்டு 2-ந்தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com