ராமேசுவரம் மீனவர்களை நடுக்கடலில் தாக்கி துரத்தியடித்த இலங்கை கடற்படை

கச்சத்தீவு அருகே இந்திய கடல் எல்லையில் வலைகளை விரித்து மீன் பிடித்துக்கொண்டு இருந்தனர்.ராமேசுவரம் மீனவர்கள் இலங்கை கடற்படையினர் தாக்குதல் காரணமாக மீன்பிடிக்க முடியாமல் லேசான காயங்களுடன் அங்கிருந்து புறப்பட்டனர்.
Fishermen
Published on

ராமேசுவரம்:

மீன்பிடி தடைகாலம் முடிந்து கடலுக்கு சென்ற ராமேசுவரம் மீனவர்களுக்கு தொடர்ந்து சோதனை காலமாகவே இருந்து வருகிறது. 61 நாட்களுக்கு பிறகு கடலுக்கு சென்ற முதல் நாளே பாம்பன் மீனவர்கள் 3 பேர் நடுக்கடலில் படகு மூழ்கி பலியானார்கள்.

அடுத்தடுத்த நாட்களில் தற்போது வரை 47 மீனவர்களை எல்லை தாண்டியதாக கூறி இலங்கை கடற்படை சிறைபிடித்து சென்றுள்ளனர். அவர்களின் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டதால் வாழ்வாதாரம் இழந்து தவித்து வரும் மீனவர்களை விடுதலை செய்யக்கோரி சக மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தநிலையில் ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் இருந்து நேற்று அதிகாலை 400-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அனுமதி பெற்று 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். நள்ளிரவில் அவர்கள் கச்சத்தீவு அருகே இந்திய கடல் எல்லையில் வலைகளை விரித்து மீன் பிடித்துக்கொண்டு இருந்தனர்.

அப்போது அங்கு மின்னல் வேகத்தில் இலங்கை ராணுவத்துக்கு சொந்தமான 6 குட்டி ரோந்து கப்பல்களில் இலங்கை கடற்படையினர் வந்தனர். அவர்களை பார்த்ததும் பீதியடைந்த ராமேசுவரம் மீனவர்கள் வலைகளை சுருட்டிக் கொண்டு அங்கிருந்து புறப்பட தயாரானார்கள்.

ஆனாலும் மீனவர்களின் விசைப்படகுகளை சுற்றி வளைத்த இலங்கை கடற்படையினர் மீனவர்கள் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தி மீன்பிடிக்க விடாமல் அந்த பகுதியில் இருந்து விரட்டியடித்தனர். அத்துடன் 10-க்கும் மேற்பட்ட படகுகளில் தாவிக்குதித்த இலங்கை கடற்படை வீரர்கள், மீனவர்கள் பிடித்து வைத்திருந்த விலை உயர்ந்த இறால் உள்ளிட்ட மீன்களையும் பறிமுதல் செய்தனர்.

இதனால் பல ஆயிரம் செலவு செய்து மீன்பிடிக்க சென்ற ராமேசுவரம் மீனவர்கள் இலங்கை கடற்படையினர் தாக்குதல் காரணமாக மீன்பிடிக்க முடியாமல் லேசான காயங்களுடன் அங்கிருந்து புறப்பட்டனர். இலங்கை கடற்படையின் தாக்குதலால் ஒவ்வொரு படகுக்கும் பல ஆயிரம் இழப்புடன் இன்று காலை பாதியில் கரை திரும்பினர்.

ஏற்கனவே சிறைபிடித்த மீனவர்களையும், அவர்களின் படகுகளையும் விடுவிக்க கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் மீன்பிடிக்க விடாமல் தாக்கி விரட்டியடிப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் செயலாக இருக்கிறது என்று மீனவர்கள் வேதனையுடன் கூறினர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com