மழை பெய்ய வேண்டி அரச மரத்திற்கும், வேப்ப மரத்திற்கும் திருமணம் நடத்தி மக்கள் வழிபாடு

அரச மரமும், வேப்ப மரமும் அருகிலேயே வளர்ந்ததால் தெய்வமாக வணங்கி வந்த கிராம மக்கள், ஒவ்வொரு செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் வழிபாடு நடத்தி வருகின்றனர்.
திருமண அழைப்பிதழ் -  திருமணம்
திருமண அழைப்பிதழ் - திருமணம்
Published on

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள சமுத்திராபட்டியை சேர்ந்தவர் கைலாசம். விவசாயி. இவரது மனைவி அழகம்மாள். இவர்களுக்கு 6 மகள்கள் உள்ளனர். தனக்கு ஆண் குழந்தை வேண்டும் என்று விரும்பிய கைலாசம். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஊருக்கு பொதுவான கோம்மைபட்டி மந்தை பகுதியில் அரச மரக்கன்றை நட்டு வைத்து அதை பிள்ளைபோல் நினைத்து வளர்த்து வந்தார்.

சில நாட்களிலேயே அரச மரக்கன்றின் அருகிலேயே வேப்ப மரக்கன்றும் தாமாகவே வளர்ந்தது. அரச மரமும், வேப்ப மரமும் அருகிலேயே வளர்ந்ததால் கிராம மக்கள் அதனை தெய்வமாக வணங்கி வந்தனர். ஒவ்வொரு செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் வழிபாடு நடத்தி வருகின்றனர். குறிப்பாக குழந்தை வரம் வேண்டிய ஏராளமான பொதுமக்கள் இங்கு வந்து வழிபட்டு செல்வது வழக்கம்.

இந்நிலையில் முருகன் வைகாசி மாத வளர்பிறை முகூர்த்த நாளை முன்னிட்டு உலக நன்மைக்காகவும், தொடர் மழை பெய்ய வேண்டியும் அரச மரத்திற்கும் வேப்ப மரத்திற்கும் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். இது தொடர்பாக மரங்களை பராமரித்து வரும் கைலாசத்திடம் தெரிவித்தனர்.

இதற்கு அவரும் சம்மதம் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து திருமண அழைப்பிதழும் அச்சடிக்கப்பட்டது. அதில் மணமகன் அரசன் என்றும், மணமகள் வேம்பு நாயகி என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. சமுத்திராப்பட்டி, கோம்பைபட்டி, சம்பபட்டி, பூதகுடி, அம்மாபட்டி, சடையம்பட்டி, புதுப்பட்டி ஆகிய கிராமங்களுக்கு வீடு வீடாக சென்று அழைப்பிதழ் வினியோகம் செய்யப்பட்டது.

இதனையடுத்து கிராம மக்கள் அந்தப் பகுதிக்கு திரண்டு வந்தனர். அரச மரத்துக்கு பட்டு வேட்டியும் வேப்ப மரத்துக்கு சேலையும் கட்டப்பட்டது. பின்னர் திருமண சடங்கு நடந்தது. மேலும் இரண்டு மரங்களுக்கும் மாலைகள் அணிவிக்கப்பட்டன. தீபாராதனையை தொடர்ந்து மந்திரங்கள் ஓத மேளதாளம் முழங்க கிராம மக்கள் புடைசூழ அரச மரத்திற்கும் வேப்ப மரத்திற்கும் திருமணம் நடந்தது.

புதுக்கோட்டை மாவட்டம் தேனிமலை முருகன் கோயில் குருக்கள் வேப்ப மரத்திற்கு தாலி கட்டி திருமணத்தை நடத்தி வைத்தார். வினோத திருமணத்துக்கு விருந்தாளிகளாக வந்து இருந்த கிராம மக்களுக்கு அறுசுவை உணவுடன் விருந்து நடந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்...அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு கோடை விடுமுறை குறைப்பு

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com