சிதம்பரம் கோவிலை சுற்றி போராட்டம் நடத்த கூடாது- அரசு பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு

கோவில் வளாகத்திற்கு அருகில் போராட்டம் நடத்தி கோவிலுக்கு வருபவர்களுக்கு இடையூறு செய்கின்றனர்.
சென்னை ஐகோர்ட்
சென்னை ஐகோர்ட்
Published on

சென்னை:

கடலூர், சிதம்பரம் நடராஜர் கோவில் கனகசபையில் நின்று தரிசனம் செய்ய அனுமதி கோரி ஒரு பிரிவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இந்த போராட்டத்துக்கு தடை விதிக்க கோரி சிதம்பரத்தை சேர்ந்த ராமநாதன் என்பவர் உள்ளிட்டோர் சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

அந்த மனுவில், “தீட்சிதர்களை விரும்பாத ஒரு குழுவினர், தவறான தகவல்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர். கோவில் வளாகத்திற்கு அருகில் போராட்டம் நடத்தி கோவிலுக்கு வருபவர்களுக்கு இடையூறு செய்கின்றனர்.

கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் கொடுக்கும் அழுத்தம் காரணமாக, கனகசபை மண்டபத்தை திறக்குமாறு மாவட்ட வருவாய் அதிகாரி மற்றும் போலீஸ் துணை சூப்பிரண்டு ஆகியோர் வற்புறுத்துகின்றனர்.

இது அரசியலமைப்பு சட்டத்தை மீறிய செயல்.அதனால், நடராஜர் கோவிலை சுற்றியுள்ள பகுதிகளில் போரட்டம் நடத்த அனுமதிக்க கூடாது என மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கும். கோவில் விவகாரத்தில் தலையிட வேண்டாம் என பொது தீட்சிதர் செயலாளருக்கும், விருத்தாச்சலத்தை சேர்ந்த மக்கள் அதிகாரம் அமைப்பினருக்கும் உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி, நீதிபதி பரத சக்ரவர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் ஏற்கனவே அளித்த புகாரின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தும், இந்த வழக்கிற்கும் பதில் அளிக்கும்படி தமிழ்நாடு அரசுக்கும் உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை 2 வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com