அ.தி.மு.க. ஆட்சியில் மின் துறையில் நடந்த தவறுகள் குறித்து பொதுவெளியில் விவாதிக்க தயாரா?- தங்கமணிக்கு அமைச்சர் சவால்

மின் இணைப்பு எண்ணை ஆதாருடன் இணைக்க வரும் 15-ந் தேதி கடைசி நாளாகும். இது மேலும் நீட்டிக்கப்படாது. மின் கட்டண உயர்வு பற்றி பேசும் அ.தி.மு.க., பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு, நூல் விலை உயர்வு குறித்து பேசுவதில்லை.
அ.தி.மு.க. ஆட்சியில் மின் துறையில் நடந்த தவறுகள் குறித்து பொதுவெளியில் விவாதிக்க தயாரா?- தங்கமணிக்கு அமைச்சர் சவால்
Published on

ஈரோடு:

ஈரோடு கிழக்கு தொகுதிக்குட்பட்ட வீரப்பன்சத்திரத்தில், அமைச்சர் செந்தில் பாலாஜி பிரசாரம் மேற்கொண்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கைத்தறி நெசவாளர்களுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரத்தை 200 யூனிட்டில் இருந்து 300 ஆகவும், விசைத்தறியாளர்களுக்கு 750 யூனிட்டில் இருந்து 1000 யூனிட் ஆகவும் உயர்த்தி வழங்கப்படும் என உறுதி அளித்திருந்தோம். தற்போது ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், அந்த அறிவிப்பினை வெளியிட முடியவில்லை.

எனவே இலவச மின்சார அளவை உயர்த்தி வழங்குவதற்கான அரசாணை வெளியிட மத்திய தேர்தல் ஆணையத்திடம் தமிழக அரசு விண்ணப்பித்துள்ளது. தேர்தல் முடிந்ததும் தமிழகம் முழுவதும் விசைத்தறி, கைத்தறிகளுக்கான இலவச மின்சாரம் உயர்த்தி வழங்கப்படும்.

கடந்த 2011-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சி அமைந்ததும் மின்கட்டணம் 180 சதவீதம் உயர்த்தப்பட்டது. தி.மு.க. ஆட்சியில் தற்பொழுது 30 சதவீதம் மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளது. சென்னை போன்ற பெருநகரங்களில் அடுக்குமாடி குடியிருப்புகளில் நீச்சல் குளம், திரையரங்கு போன்ற வசதிகள் உள்ளன. எனவே தான் அதற்கு தனியாக வணிக மின்கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும் அ.தி.மு.க. ஆட்சியில் மின்வாரியத்திற்கு ரூ.1.5 லட்சம் கோடி கடன் சுமை ஏற்பட்டது. அதை சரிக்கட்டவே தற்போது மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. அ.தி.மு.க. ஆட்சியில் மின்மிகை மாநிலம் என்று பேசினாலும் ஒரு மெகாவாட் மின்சாரம் கூட கூடுதலாக உற்பத்தி செய்யவில்லை.

தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களால்தான், தமிழகத்தில் மின் உற்பத்தி அதிகரித்தது. தனியாரிடமிருந்து அதிக விலைக்கு மின்சாரத்தை கொள்முதல் செய்து, மின்மிகை மாநிலம் என அ.தி.மு.க. ஆட்சியில் அறிவித்துக் கொண்டார்கள்.

தற்போது தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் 1½ லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சார இணைப்பை வழங்கினோம். அ.தி.மு.க. ஆட்சியில் மத்திய அரசின் பவர் பைனான்ஸ் கார்ப்பரேஷனிடமிருந்து, அதிக வட்டிக்கு மின்வாரியம் கடன் வாங்கி இருந்தது. அந்த வட்டியை குறைத்துள்ளோம். மின் விநியோகத்தில் மின்சார இழப்பு 17 சதம் உள்ளது. அதை கடந்தாண்டு 0.7 சதம் குறைத்துள்ளோம்.

நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு 26 ஆயிரம் புதிய ட்ரான்ஸ்பார்மர்கள் நிறுவப்பட்டுள்ளன. விவசாய பயன்பாடு மற்றும் குடியிருப்புகளில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்டு, மின் கட்டணத்தை நுகர்வோர் தெரிந்து கொள்ள விரைவில் வசதி செய்யப்படும். அ.தி.மு.க. ஆட்சியில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலக்கரி, மின் உற்பத்தி நிலையங்களிடமிருந்து காணாமல் போனது. இது குறித்து லஞ்ச ஒழிப்பு கண்காணிப்பு துறையிடம் புகார் செய்யப்பட்டுள்ளது. விரைவில் விசாரணை அறிக்கை வெளிவரும்.

அ.தி.மு.க. ஆட்சியில் மின் துறையில் நடந்த தவறுகள் குறித்து முன்னாள் அமைச்சர் தங்கமணியுடன் பொதுவெளியில் நான் விவாதம் செய்ய தயாராக இருக்கிறேன். அவர் தயாரா?

மின் இணைப்பு எண்ணை ஆதாருடன் இணைக்க வரும் 15-ந் தேதி கடைசி நாளாகும். இது மேலும் நீட்டிக்கப்படாது. இவ்வாறு இணைப்பதால் வீடுகளுக்கு வழங்கும் 100 யூனிட் இலவச மின்சாரம் ரத்து செய்யப்படாது.

தமிழகத்தின் தற்போதைய மின் உற்பத்தி திறன் 32 ஆயிரம் மெகாவாட்டாகும். இதையடுத்த 10 ஆண்டுகளில் 64 ஆயிரம் என உயர்த்த திட்டமிட்டு பணிகளை தொடங்கி உள்ளோம்.

மின் கட்டண உயர்வு பற்றி பேசும் அ.தி.மு.க., பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு, நூல் விலை உயர்வு குறித்து பேசுவதில்லை. மத்திய அரசை கண்டித்து போராட்டம் நடத்தவில்லை. அ.தி.மு.க. ஈ.பி.எஸ். அணி பா.ஜ.க.வின் பி டீமாக செயல்படுகிறது. அ.தி.மு.க. ஒன்றுபட்டாலும், இரட்டை இலை சின்னம் கிடைத்தாலும் தி.மு.க. தேர்தலில் மகத்தான வெற்றி பெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com