

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ்மலை பகுதியான பாச்சலூரைச் சேர்ந்த கூலித் தொழிலாளி சத்தியராஜ். இவரது மகள் பிரித்திகா (வயது 9). அங்குள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தார்.
கடந்த 15-ந் தேதி பள்ளிக்கு சென்ற மாணவி பள்ளி வளாகத்திலேயே உடல் எரிந்த நிலையில் கிடந்தார். ஒட்டன்சத்திரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இந்த வழக்கை சந்தேக மரணம் என தாண்டிக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாணவி இறப்பில் மர்மம் உள்ளது எனக்கூறி உரிய நீதி வழங்கக்கோரியும், அவரது பெற்றோர் மற்றும் கொடைக்கானல் மலைக்கிராம மக்கள் 1 வாரத்துக்கும் மேலாக போராடி வருகின்றனர். தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் மறுத்து வருவதால் பாச்சலூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்பட பல்வேறு பள்ளிகள் பூட்டி கிடக்கின்றன.
1 வாரத்துக்கு மேல் ஆகியும் போலீசார் விசாரணையில் எந்த வித தடயமும் கிடைக்கவில்லை. சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்படவில்லை என்று முதல் கட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. அவரது உடல் பாகங்கள் ஆய்வுக்காக சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதன் முடிவுகள் இன்னும் வரவில்லை.
ஏ.டி.எஸ்.பி. தலைமையில் கொடைக்கானல் ஆர்.டி.ஓ மற்றும் அதிகாரிகள் தொடர்ந்து பொதுமக்களிடமும், மலை கிராம மக்களிடமும் விசாரணை நடத்தி வரும் நிலையில் நேற்று கொடைக்கானலில் பிற்பகலில் தொடங்கிய போராட்டம் மாலை வரை நீடித்தது. இதனால் நகர் முழுவதும் கடும் போக்குவரத்து நெரிசலுக்கு உள்ளானது. போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இருந்தபோதும் போராட்டத்தை கைவிடாத பொதுமக்கள் கைது செய்யப்பட்டனர்.
கொடைக்கானல் நகர் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளிலும் மாணவர் அமைப்பினர், அரசியல் கட்சியினர் ஆகியோரும் இதே கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனையடுத்து இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்ற மாவட்ட எஸ்.பி. சீனிவாசன் தமிழக டி.ஜி.பி.க்கு பரிந்துரை செய்தார்.
அவரது கோரிக்கையை ஏற்று மாணவி மரண வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றி தமிழக டி.ஜி.பி சைலேந்திரபாபு இன்று உத்தரவிட்டார். எனவே இதுவரை விசாரணை நடத்திய போலீஸ் அதிகாரிகள் தங்களது அறிக்கையை சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகளிடம் வழங்குவார்கள். மேலும் வழக்கின் தீவிரமும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம் செய்யப்பட்டது குறித்து மாணவியின் பெற்றோர் தெரிவிக்கையில், எங்கள் மகளுக்காக பல்வேறு பகுதியில் போராட்டம் நடத்தி வருவது எங்களுக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. அரசு இந்த வழக்கை தாமதப்படுத்தாமல் விரைந்து நடத்தி எங்கள் மகள் இறப்பில் தொடர்புடையவர்களை கண்டறிந்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளியில் படிக்கும் மற்ற குழந்தைகளின் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும் என்றார்.
இதையும் படியுங்கள்...தமிழகத்தில் மேலும் 33 பேருக்கு ஒமைக்ரான் - அமைச்சர் தகவல்