

திருத்துறைப்பூண்டி:
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நகர மன்றத் தேர்தலில் தலைவராக தி.மு.க சார்பில் போட்டியிட்ட கவிதா பாண்டியன் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்நிலையில் துணைத் தலைவர் பதவி கூட்டணிக் கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கு தி.மு.க தலைமை ஒதுக்கீடு செய்தது. ஆனால் நகரமன்ற தலைவர் கவிதா பொறுப்பேற்கும் நிகழ்ச்சிக்கு துணைத் தலைவராக அறிவிக்கப்பட்டிருந்த ராமலோகஈஸ்வரி செல்லவில்லை. நேற்று அதிகாலை இவரது வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் பாதுகாப்பு கருதி கலந்து கொள்ளவில்லை என கூறப்படுகிறது.
இதனால் தி.மு.க சார்பில் உறுப்பினராக வெற்றி பெற்ற பாண்டியன் நகரமன்ற துணைத் தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதாவின் கணவர்.
இந்நிலையில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் பதவியேற்றவர்கள் உடனடியாக பதவி விலக வேண்டும் என அறிக்கை வெளியிட்டதை தொடர்ந்து தமிழகத்தில் முதல் ஆளாக பாண்டியன் நகரமன்ற துணைத் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.