அம்மாபேட்டை பேரூராட்சி 2-வது வார்டு தி.மு.க. வேட்பாளர் மாரடைப்பால் மரணம்

அம்மாபேட்டை பேரூராட்சி 2-வது வார்டு தி.மு.க. வேட்பாளர் அழகேசன் இறந்து விட்டதால் அம்மாபேட்டை பேரூராட்சி 2-வது வார்டு தேர்தல் ரத்தாகும் என்று கூறப்படுகிறது.
அழகேசன் (என்கிற) சித்துரெட்டி
அழகேசன் (என்கிற) சித்துரெட்டி
Published on

அம்மாபேட்டை:

ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை பேரூராட்சி 2-வது வார்டு தி.மு.க. வேட்பாளராக ஊமாரெட்டியூர் சுந்தராம்பாளையத்தை சேர்ந்த அழகேசன் (என்கிற) சித்துரெட்டி (62) போட்டியிட்டார்.

இவர் கடந்த சில நாட்களாக வார்டு முழுவதும் தீவிர பிரசாரம் செய்து வந்தார். மேலும் நேற்று காலை முதல் இரவு வரை ஆதரவாளர்களுடன் தீவிர பிரசாரம் மேற்கொண்டார்.

இரவில் வீடு திரும்பிய அழகேசன் சாப்பிட்டு விட்டு தூங்கினார். இன்று அதிகாலை 5.30 மணியளவில் தூங்கி எழுந்த அழகேசன் அருகில் உள்ள கடைக்கு சென்று டீ குடித்து விட்டு வீடு திரும்பினார். அப்போது தனக்கு நெஞ்சு வலிப்பதாக கூறி உள்ளார்.

இதையடுத்து அவரை பூதப்பாடியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக அந்தியூரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அப்போது அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியிலேயே மாரடைப்பு ஏற்பட்டு அழகேசன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதையடுத்து குடும்பத்தினர் கதறி அழுதனர். பின்னர் அவரது உடல் ஊமாரெட்டியூர் சுந்தராம்பாளையத்தில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அவரது உடலுக்கு கட்சியினர் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

இறந்த அழகேசனுக்கு மணி என்ற மனைவியும், ஜெகன் என்ற மகனும், கீர்த்தனா என்ற மகளும் உள்ளனர். தி.மு.க. வேட்பாளர் அழகேசன் இறந்து விட்டதால் அம்மாபேட்டை பேரூராட்சி 2-வது வார்டு தேர்தல் ரத்தாகும் என்று கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com