ஈ.பி.எஸ் மேல்முறையீடு வழக்கு- வரும் 25ம் தேதிக்கு ஒத்திவைப்பு

ஓபிஎஸ் கோரிக்கையை ஏற்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் துரைசாமி, சுந்தர்மோகன் விசாரணையை ஒத்திவைத்தனர்.ஓபிஎஸ் தரப்பில் மூத்த வழக்கறிஞர் குருகிருஷ்ணகுமார் ஆஜராக அவகாசம்.
ஈ.பி.எஸ் மேல்முறையீடு வழக்கு- வரும் 25ம் தேதிக்கு ஒத்திவைப்பு
Published on

அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் கடந்த ஜூலை 11-ந்தேதி சென்னை வானகரத்தில் நடந்தது. இதில் அ.தி.மு.க.வின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்த பொதுக்குழு கூட்டத்தை செல்லாது என்று அறிவிக்ககோரி ஓ.பன்னீர்செல்வம், அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் சென்னை கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் செல்லாது என்றும், ஜூன் 23-ந்தேிக்கு முன்பு இருந்த நிலையே அ.தி.மு.க.வில் தொடர வேண்டும். கட்சி விதிகளின்படி 30 நாட்களுக்குள் ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் இணைந்து பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என்றும் தீர்ப்பு அளித்தார்.

இந்த தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கில் தங்கள் தரப்பு வாதங்களையும் கேட்ட பிறகே உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் கேவியட் மனுதாக்கல் செய்தார்.

இந்த நிலையில் தனி நீதிபதியின் சான்றளிக்கப்பட்ட உத்தரவு நகல் இல்லாமல் இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளக்கோரி எடப்பாடி பழனிசாமி தரப்பில் கூடுதல் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு நீதிபதிகள் எம்.துரைசாமி, சுந்தர் மோகன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மூத்த வக்கீல் விஜய் நாராயணன் ஆஜராகி மனுதாரர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மேல்முறையீட்டு மனுவை விசாரணைக்கு ஏற்க வேண்டும் என்று வாதிட்டார்.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் மேல் முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று உத்தரவிட்டனர்.

அதன்படி இந்த மேல் முறையீட்டு மனு இன்று சென்னை ஐகோர்ட்டில் நீதிபதிகள் எம்.துரைசாமி, சுந்தர் மோகன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் மூத்த வக்கீல் குரு கிருஷ்ணகுமார் ஆஜராக உள்ளதால், விசாரணையை தள்ளிவைக்க வேண்டும் என்று கோரிக்கை முன் வைக்கப்பட்டது.

அதற்கு நீதிபதிகள், இந்த மேல்முறையீட்டு வழக்கில், இடைக்கால மனுவை விசாரித்து, தடை எதையும் பிறப்பிக்க தேவையில்லை. வழக்கின் இறுதி விசாரணைக்காக வருகிற 25-ந் தேதிக்கு (வியாழக்கிழமை) தள்ளிவைக்கிறோம்" என்று உத்தரவிட்டனர்.

ஓ.பன்னீர்செல்வம் வக்கீலுக்கு அவகாசம் வழங்கி இந்த உத்தரவை நீதிபதிகள் பிறப்பித்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com