கீழ்ப்பாக்கத்தில் ரூ.35 கோடி செலவில் 6 மாடியில் 239 படுக்கைகளுடன் நவீன புதிய மனநல காப்பகம்

புதிய மருத்துவமனைக் கட்டிடம் மொத்தம் 88,039 சதுர அடி பரப்பளவில் தரைத்தளம் மற்றும் 6 தளங்களுடன் 239 படுக்கை வசதிகளுடன் உலகத் தரத்தில் வடிவமைக்கப்பட்டுஉள்ளது. மூன்றாம் தளம் உள்நோயாளிகள் பிரிவு, புலன் உணர்வு அறை, அடிமைத்தன்மை மீட்பு ஆலோசனை அறை, போன்ற வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
புதிய கட்டிடத்தின் முகப்புத் தோற்றம்
புதிய கட்டிடத்தின் முகப்புத் தோற்றம்
Published on

சென்னை:

தமிழக அரசு வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்துவமனையில் சிகிச்சை பெற வருபவர்களுக்குச் சிறந்த மருத்துவச் சேவையை வழங்குவதற்கான நவீன உபகரணங்களுடன் கூடிய புதிய மனநல மற்றும் நரம்பியல் நிலையத்திற்கான ஒப்புயர்வு மையக் கட்டிடம் ரூபாய் 35 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் என மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் பேரவையில் அறிவித்தார்.

அந்த அறிவிப்பினைச் செயல்படுத்தும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 30.3.2023 அன்று ரூபாய் 35 கோடி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டார். அதன் தொடர்ச்சியாக 24.8.2023 அன்று இக்கட்டிடத்திற்கான கட்டுமானப் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.

புதிய மருத்துவமனைக் கட்டிடம் மொத்தம் 88,039 சதுர அடி பரப்பளவில் தரைத்தளம் மற்றும் 6 தளங்களுடன் 239 படுக்கை வசதிகளுடன் உலகத் தரத்தில் வடிவமைக்கப்பட்டுஉள்ளது. தரைத்தளத்தில் கதிரியக்க நோய் கண்டறிதல் பிரிவு, மனநலப் புறநோயாளிகள் பிரிவு நரம்பியல் புறநோயாளிகள் பிரிவு; முதல் மற்றும் இரண்டாம் தளங்களில் மூப்பியல் பிரிவு, நரம்பியல் புற நோயாளிகள் பிரிவு, அறிவாற்றல் பழகுமுறை மற்றும் குழந்தைகள் ஆலோசனை அறை போன்ற வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளன.

மூன்றாம் தளம் உள்நோயாளிகள் பிரிவு, புலன் உணர்வு அறை, அடிமைத்தன்மை மீட்பு ஆலோசனை அறை, போன்ற வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

4-ம் மற்றும் 5-ம் தளங்கள் நரம்பியல் பிரிவு மற்றும் குழந்தைகள் பிரிவு போன்ற வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளன. 6-ம் தளத்தில் தீவிர சிகிச்சைப் பிரிவு மற்றும் இரண்டு அறுவை சிகிச்சை அரங்குகள் போன்ற வசதிகளும் இடம்பெறும்.

இக்கட்டிடத்தின் அனைத்துத் தளங்களிலும் மாற்றுத்திறனாளிகளுக்கான கழிப்பிடம், பொதுக் கழிப்பிடம், இரண்டு மின் தூக்கிகள், இரண்டு படிக்கட்டுகள், சாய்வு தளம், மருத்துவ-திரவ ஆக்சிஜன் இணைப்புகள், தீயணைப்பு உபகரணங்கள் போன்ற அனைத்து வசதிகளும் இடம்பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டின் கட்டமைப்புகளை மேம்படுத்தி வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி பொதுப்பணித்துறையின் மூலம் தமிழ்நாட்டில் கடந்த மூன்றாண்டுகளில் மட்டும் 4,821 கோடியே 55 லட்சம் ரூபாய்ச் செலவில் 941 மருத்துவ துறைச் சார்ந்த புதிய கட்டிடங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. இவை மட்டுமல்லாமல் மருத்துவத் துறையில் மேலும் பல்வேறு புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகின்றன.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com