டாஸ்மாக் கடைகளை மீண்டும் தனியாரிடம் ஒப்படைக்க முடிவு? - தமிழ்நாடு அரசு ஆலோசனை

தமிழ்நாட்டில் தற்போது டாஸ்மாக் நிறுவனத்தின் கீழ் 4,048 சில்லறை மதுபான கடைகள் இயங்கி வருகின்றன.
டாஸ்மாக் கடைகளை மீண்டும் தனியாரிடம் ஒப்படைக்க முடிவு? - தமிழ்நாடு அரசு ஆலோசனை
Published on

டாஸ்மாக் கடைகளை தனியாரிடம் ஒப்படைக்க தமிழ்நாடு அரசு முடிவெடுத்து உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மதுபான கடைகள்

தமிழ்நாட்டில் கடந்த 23 ஆண்டுகளுக்கு முன்பு, மதுபான கடைகள் தனியாருக்கு ஏலம் மற்றும் குலுக்கல் முறையில் வழங்கப்பட்டு வந்தது. ஆனால், பல இடங்களில் பெரிய வியாபாரிகள் கூட்டு சேர்ந்து ஏலத்தை கட்டுப்படுத்தியதாக அரசுக்கு தகவல்கள் வந்தன. இதனால் ஏலம் எடுப்பதில் போட்டி குறைந்து, அரசுக்கு கிடைக்க வேண்டிய உரிமக் கட்டண வருவாயும் பாதிக்கப்பட்டது.

ஜெயலலிதா

இதையடுத்து கடந்த 2003-ம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. அரசு, தனியார் மதுபான கடைகளின் உரிமங்களை ரத்து செய்து, அதே ஆண்டு நவம்பர் 29-ந்தேதி முதல் சில்லறை விற்பனையை டாஸ்மாக் மூலம் அரசின் முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது.

தனியார் ஏல முறையில் இருந்த முறைகேடுகளை தடுக்கவும், அரசின் வருவாயை அதிகரிக்கவும், மதுபான விற்பனையை ஒழுங்குபடுத்தவும், சட்டவிரோத விற்பனை மற்றும் கள்ளச் சாராயத்தை கட்டுப்படுத்தவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அதிகாரப்பூர்வமாகவும், நிர்வாக ரீதியாகவும் காரணங்கள் கூறப்பட்டன.

பின்னர் சில ஆண்டுகளில், டாஸ்மாக் மாநில அரசின் மிகப்பெரிய வருவாய் ஆதாரங்களில் ஒன்றாக மாறிய நிலையில் ஆந்திரா உள்ளிட்ட அண்டை மாநிலங்கள் தமிழ் நாட்டில் உள்ளது போல் மது விற்பனையை அரசே ஏற்று நடத்துவது குறித்து ஆலோசித்து வந்தது.

தமிழ்நாடு அரசு

இந்த நிலையில் 23 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது, டாஸ்மாக் கடைகளை தனியாரிடம் ஒப்படைக்க தமிழ்நாடு அரசு முடிவெடுத்து உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதன் முதல் கட்டமாக மாநகராட்சிகள் மற்றும் நகராட்சி பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகள் மட்டும் தனியாரிடம் ஒப்படைக்கப்படும் என தெரிகிறது. இதற்கு தேவையான மது விலக்கு மற்றும் ஆயத்தீர்வை சட்டத்திருத்த மசோதா, வரவிருக்கும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படும் என்று மது விலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தனியாரிடம் ஒப்படைப்பு

தமிழ்நாட்டில் தற்போது டாஸ்மாக் நிறுவனத்தின் கீழ் 4,048 சில்லறை மதுபான கடைகள் இயங்கி வருகின்றன. மாநில அரசுக்கு அதிக வருவாய் ஈட்டித் தரும் துறைகளில் டாஸ்மாக் முக்கியமான ஒன்றாகும். 2025-26ம் ஆண்டுக்கான மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வை துறை கொள்கை விளக்க குறிப்பின்படி, 2024–-25 நிதியாண்டில் மது பானங்களுக்கான ஆயத் தீர்வை வரி மற்றும் மதிப்பு கூட்டு வரி மூலம் மட்டும் ரூ.48,344 கோடி வருவாய் மாநில அரசுக்கு கிடைத்து உள்ளது.

இந்த ஆண்டும் கூடுதல் வரி விதிப்பு மூலம் மேலும் அதிக வருவாய் ஈட்ட அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. டாஸ்மாக் கடைகளை தனியாரிடம் ஒப்படைப்பதால் ஏற்படக்கூடிய வருவாய் இழப்பை ஈடுகட்ட, புதிய வருவாய் ஆதாரங்களை கண்டறியவும் தமிழக அரசு திட்டமிட்டு வருவதாக தெரிகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com