சட்டசபை தேர்தலில் தோல்வி: தமிழக பா.ஜ.க. தலைவர் விரைவில் மாற்றம்

புதிய மாநிலத் தலைவரை நியமிப்பதற்கான ஆலோசனை இறுதிக்கட்டத்தை எட்டி இருக்கிறது. 2029-ம் ஆண்டு நடக்க இருக்கும் நாடாளுமன்ற தேர்தலை மனதில் கொண்டே புதிய தலைவரை தேர்வு செய்யும் பணி தொடங்கியுள்ளது.
நயினார் நாகேந்திரன்
நயினார் நாகேந்திரன்
Published on

தமிழக பா.ஜ.க.வுக்கு புதிய தலைவர் விரைவில் நியமிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

பா.ஜ.க. தோல்வி

சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட பா.ஜ.க. ஒரு இடத்தில் மட்டும் வெற்றி பெற்றது. மற்ற இடங்களில் கடும் தோல்வியை சந்தித்தது. வாக்கு சதவீதமும் 3 சதவீதத்திற்கு கீழ் வந்தது. இது பா.ஜ.க. தலைமையை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இதைத்தொடர்ந்து தோல்விக்கான காரணத்தை ஆராய குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவினர் தோல்விக்கான காரணத்தை ஆராய்ந்து, மத்திய பா.ஜ.க. தலைமைக்கு அனுப்பினர். அதன் அடிப்படையில் தமிழக பா.ஜ.க.வுக்கு புதிய தலைவர் நியமிப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

இதற்கிடையே, முன்னாள் மாநிலத் தலைவராக இருந்த அண்ணாமலையும் கட்சியில் இருந்து விலகி, 'வீ த லீடர்ஸ்' என்ற அமைப்பை தொடங்கியுள்ளார். அவருக்கு ஆதரவாக மாநில துணைத்தலைவராக இருந்த கரு.நாகராஜன் உள்பட பா.ஜ.க. நிர்வாகிகள் பலரும் பா.ஜ.க.வில் இருந்து வெளியேறினர்.

தலைவர் பட்டியலில் யார், யார்?

இந்த நிலையில் தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்தவும், இளைஞர்களை ஈர்க்கவும் கட்சியில் புதிய மாற்றத்தை கொண்டு வரவும் விரைவில் புதிய தலைவரை நியமிக்க பா.ஜ.க. திட்டமிட்டுள்ளது. தற்போதைய தலைவர் நயினார் நாகேந்திரன் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தான் மாநில தலைவராக பதவியேற்றிருந்தார். அவரது தலைமையில் ஒரே ஒரு தேர்தலை மட்டும் சந்தித்த நிலையில் இந்த மாற்றம் நிகழ இருக்கிறது.

புதிய மாநிலத் தலைவரை நியமிப்பதற்கான ஆலோசனை இறுதிக்கட்டத்தை எட்டி இருக்கிறது. 2029-ம் ஆண்டு நடக்க இருக்கும் நாடாளுமன்ற தேர்தலை மனதில் கொண்டே புதிய தலைவரை தேர்வு செய்யும் பணி தொடங்கியுள்ளது. புதிய தலைவர் பட்டியலில் மாநில பொதுச்செயலாளர் ராம சீனிவாசன், முன்னாள் எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன், மூத்த தலைவர் எச்.ராஜா, சரத்குமார், மாநிலச் செயலாளர்கள் அஸ்வத்தாமன், வினோஜ் பி.செல்வம் ஆகியோரின் பெயர்கள் பரிசீலனையில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

மேலும், மத்திய மந்திரியாக இருக்கும் நிர்மலா சீதாராமனையும் தமிழக அரசியலுக்கு கொண்டு வரலாமா? என்பது குறித்தும் மத்திய பா.ஜ.க. தலைமை யோசித்து வருகிறது. விரைவில் தமிழக பா.ஜ.க. புதிய தலைவர்

யார்? என்பது தெரிந்து விடும்.

X

Maalai Malar
www.maalaimalar.com