

கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சரல்விளை சேர்ந்த பிளஸ்சிங் ஷைஜீ வயது 25. இவர் 2 கையும் இல்லாத மாற்றுத்திறனாளி. இவர் 2023-ம் ஆண்டு முதல் டேக்வாண்டோ விளையாட்டில் பயிற்சி பெற்று வந்துள்ளார். இவர் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகளை பெற்றுள்ளார்.
இந்நிலையில் மங்கோலியா நாட்டின் உலான்பாதரில் நடைபெற்ற, 11-வது ஆசிய பாரா டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் போட்டியில் 63 கிலோவுக்குக் கீழ் K41 பிரிவு போட்டியில் கலந்து கொள்ள தேர்வு பெற்றார்.
மங்கோலியா செல்ல முடியாமல் தவித்து வந்த நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் அவர்களை சந்தித்து கோரிக்கை வைத்தார். கோரிக்கையை ஏற்று அவர் தனது சொந்த நிதியிலிருந்து 4 லட்சத்து 50 ஆயிரம் கொடுத்து விளையாட்டில் பங்கு கொள்ள அனுப்பி வைத்தார்.
இந்நிலையில் மங்கோலிய நாட்டில் நடைபெற்ற டேக்வாண்டோ போட்டியில் கலந்து கொண்டு முதல் பரிசான தங்க பதக்கம் பெற்றார். அவர் இன்று விஜய்வசந்த் எம்.பி அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், எனக்கு உதவி செய்து விளையாட்டு போட்டியில் பங்கு பெற முக்கியத்துவம் கொடுத்தவர் நமது பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் அவர்களுக்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்டாலின் அவர்களை சந்தித்தார். அவர் பொன்னாடை போர்த்தி பாராட்டு தெரிவித்து பரிசு வழங்கினார்.
மேலும் அவர், இரண்டு கைகளும் இல்லாத மாற்றுத்திறனாளியான தான் ஒரு பட்டதாரி எனவும், தமிழக அரசு தனக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.