சென்னையில் திடீர் மழை... சற்று ஆறுதல் அடைந்த மக்கள்

தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையில் திடீரென பெய்த மழையில் சென்ட்ரல் ரெயில் நிலையப் பகுதியில் குடை பிடித்து செல்லும் பெண்களை படத்தில் காணலாம்.
Published on

தமிழ்நாட்டில் அக்னி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் முடிந்தும் வெயிலின் உக்கிரம் குறையவில்லை. இதனால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர். வெயிலின் உக்கிரத்தில் இருந்து தப்பிக்க தென்மேற்கு பருவமழை கை கொடுக்குமா? என எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில், தெற்கு ஆந்திரம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுவதால் இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மற்றும் புதுவை பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கன்னியாகுமரி, ராணிப்பேட்டை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் மற்றும் கோயம்புத்தூர் மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

இதனை தொடர்ந்து சென்னையில் இன்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இதனால் மழை வருமா? என்று எதிர்பார்த்திருந்த மக்களுக்கு சற்றே ஆறுதல் அளிக்கும் விதமாக மிதமான மழை பெய்து வருகிறது.

சென்னை எழும்பூர், சென்ட்ரல் ரெயில் நிலையம், தரமணி, திருவான்மியூர், வேளச்சேரி, மடிப்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. இதனால் வெயிலின் தாக்கம் குறைந்து இதமான சூழல் நிலவி வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com