

நீட் தேர்வு முறைகேட்டை கண்டித்தும் அதனை தடுக்க தவறிய மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தியும் டெல்லியில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் 5-வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
அவர்களுக்கு ஆதரவாகவும், நீட் தேர்வு முறைகேட்டை கண்டித்தும் தமிழகத்தில் போராட்டங்கள் நடந்து வருகிறது.
கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் தி.நகரில் உள்ள கம்யூனிஸ்டு கட்சி வளாகத்தில் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இன்றும் அவர்களது போராட்டம் நீடித்தது. மாநிலக் கல்லூரி மாணவர்கள் இன்று வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். லயோலா கல்லூரி முன்பு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
இந்திய மாணவர்கள் சங்கம் மற்றும் இளைஞர் சங்கம் சார்பில் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் காத்திருப்பு போராட்டம் இன்று நடந்தது.
பச்சையப்பன் கல்லூரி முன்பு அகில இந்திய மாணவர் சங்கம் சார்பில் மணிகண்டன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மெரினா கடற்கரையிலும் போலீசார் குவிக்கப்பட்டு கண்காணித்து வருகிறார்கள்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சென்னை ஐகோர்ட்டு எதிரே மாவட்டச் செயலாளர் செல்வா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதேபோன்று தமிழகம் முழுவதும் மாணவர் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சேலம் அரசு கலைக் கல்லூரியிலும் இதே கோரிக்கையை வலியுறுத்தி மாணவ- மாணவிகள் 25-க்கும் மேற்பட்டோர் கல்லூரி வளாகத்தில் நுழைவாயில் அருகே காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் நீட் தேர்வுக்கு எதிராகவும், மாணவர்களை தாக்கிய போலீஸ் அதிகாரிகளுக்கு எதிராகவும் கண்டன கோஷங்களை எழுப்பினார். பின்னர் போலீசார் சமாதானப்படுத்தியதை அடுத்து கல்லூரி மாணவ-மாணவிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.