

திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி, மதுரை ஆகிய தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படுகின்ற அனைத்து ரெயில்கள் எப்பொழுதுமே நிரம்பியே செல்கின்றன.
வழக்கமாக இயக்கப்படுகின்ற எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மட்டுமின்றி வந்தே பாரத் மற்றும் சிறப்பு ரெயில்களிலும் இடங்கள் கிடைப்பதில்லை. அனைத்து ரெயில்களின் எல்லா வகுப்புகளிலும் நிரம்பி விடுகின்றன.
குறிப்பாக தென்காசி வழியாக செங்கோட்டைக்குச் செல்லும் பொதிகை எக்ஸ்பிரஸ், கொல்லம் எக்ஸ்பிரஸ் எப்போதுமே நிரம்பி காணப்படுகின்றன. 2 மாதங்களுக்கு முன்பாக முன்பதிவு செய்தால் மட்டுமே படுக்கை வசதி கிடைக்கிறது.
தென் மாவட்ட பகுதிகளுக்கு செல்லக்கூடிய ரெயில்களில் அதிக கூட்ட நெரிசல் இருப்பதால் தெற்கு ரெயில்வே தாம்பரம்- தென்காசி இடையே அதிவிரைவு சிறப்பு ரெயிலை அறிவித்துள்ளது. வியாழன் மற்றும் சனிக்கிழமையில் வாரத்தில் 2 நாட்கள் இந்த சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது.
இந்த சிறப்பு ரெயில் பகல் நேரத்தில் இயக்கப்படுகிறது. அதிகாலையில் புறப்பட்டு மாலையில் செல்லக்கூடிய வகையில் விடப்பட்டுள்ளது.
சிறப்பு ரெயில் எண்.06135 தாம்பரத்தில் இருந்து அதிகாலை 5 மணிக்கு புறப்பட்டு அன்று பிற்பகல் 3.30 மணிக்கு தென்காசி சென்றடைகிறது.
எண். 06136 சிறப்பு ரெயில் தென்காசியில் இருந்து அதிகாலை 5 மணிக்கு புறப்பட்டு தாம்பரத்திற்கு பிற்பகல் 3.15 மணிக்கு வந்து சேருகிறது. தாம்பரத்தில் இருந்து வரு கிற 30-ந்தேதி, ஆகஸ்ட் 1,6, 8,13,15 ஆகிய நாட்களில் இயக்கப்படுகிறது. தென்காசியில் இருந்து வருகிற 31-ந்தேதி, ஆகஸ்ட் 2, 7, 9, 14,16 ஆகிய தேதிகளில் இயக்கப்படுகிறது.
இந்த சிறப்பு ரெயில் செங்கல்பட்டு, விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகாசி, ராஜபாளையம் வழியாக இயக்கப்படுகிறது. இந்த ரெயிலுக்கான முன்பதிவு தொடங்கி உள்ளது.