

சென்னை கடற்கரை-தாம்பரம் இடையே வருகிற 22-ந்தேதி முதல் 30-ந்தேதி வரையில் இரவு நேர மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது.
சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் ரூ.842 கோடியில் மறு சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. முதல் கட்டமாக, நடைமேடை 1 முதல் 5 வரையில் இரும்பு நடைமேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. 2-ம் கட்டமாக நடைமேடைகள் 6 முதல் 8 வரையிலான பகுதிகளில் நடைமேம்பாலத்திற்கான தூண்கள் மற்றும் தாங்கு சட்டங்களை அமைப்பதற்கான பணிகள் நடைபெற இருக்கிறது. இந்த பணி காரணமாக, வருகிற 5-ந்தேதி முதல் 20-ந்தேதி வரையில் 9 எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை மாற்றம் செய்யப்பட்டும், 2 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் பகுதி நேர மாற்றம் செய்யப்பட்டும் இயக்கப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பு தெற்கு ரெயில்வே சார்பில் கடந்த 30-ந்தேதி அறிவிக்கப்பட்டது. இந்த பணியின்போது மின்சார ரெயில் சேவையில் எந்த பாதிப்பும் ஏற்படாது.
இதனைதொடர்ந்து, 3-ம் கட்டமாக நடைமேடைகள் 9 முதல் 11 வரையில் நடைமேம்பாலம் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. எனவே, மின்சார ரெயில் வழித்தடத்தில் இரவு நேரங்களில் ரெயில் சேவை நிறுத்தப்பட உள்ளது. அதன்படி, எழும்பூர் ரெயில் நிலையத்தில் நடைமேடை 9 முதல் 11 வரையில் நடைமேம்பாலம் அமைக்கும் பணி வருகிற 22-ந்தேதி முதல் 30-ந்தேதி வரையில் நடைபெற உள்ளது. இதனால் ரத்து மற்றும் மாற்றம் செய்யப்படும் மின்சார ரெயில் சேவைகளின் விவரங்கள் வருமாறு:-
*சென்னை கடற்கரையில் இருந்து வருகிற 22, 24, 25, 26, 27, 28, 29 ஆகிய தேதிகளில் (வார நாட்களில்) இரவு 11:20, 11:40, 11.59 ஆகிய நேரங்களில் புறப்பட்டு தாம்பரம் செல்லும் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது.
* சென்னை கடற்கரையில் இருந்து மேற்கண்ட தேதிகளில் அதிகாலை 3.50 மணிக்கு புறப்பட்டு செங்கல்பட்டு செல்லும் மின்சார ரெயில் சென்னை கடற்கரை- தாம்பரம் இடையே பகுதிநேர ரத்து செய்யப்படுகிறது. கூடுவாஞ்சேரியில் இருந்து மேற்கண்ட தேதிகளில் இரவு 10.15, 11.20 ஆகிய நேரங்களில் புறப்பட்டு கடற்கரை வரும் மின்சார ரெயில்களும், செங்கல்பட்டில் இருந்து இரவு 10.20, 11 ஆகிய நேரங்களில் புறப்பட்டு கடற்கரை வரும் மின்சார ரெயில்களும் தாம்பரம்-கடற்கரை இடையே பகுதி நேர ரத்து செய்யப்படுகிறது.
இதேபோல, சென்னை கடற்கரையில் இருந்து வருகிற 23, 30 ஆகிய தேதிகளில் (ஞாயிற்றுக்கிழமை மட்டும்) இரவு 11.20, 11:40, 11.59 ஆகிய நேரங்களில் புறப்பட்டு தாம்பரம் செல்லும் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது. மேலும், தாம்பரத்தில் இருந்து மேற்கண்ட தேதிகளில் இரவு 11, 11.40 ஆகிய நேரங்களில் புறப்பட்டு கடற்கரை வரும் மின்சார ரெயில்களும் ரத்து செய்யப்படுகிறது.
* மேலும், சென்னை கடற்கரையில் இருந்து வருகிற 23. 30 ஆகிய தேதிகளில் அதிகாலை 3.50 மணிக்கு புறப்பட்டு செங்கல்பட்டு செல்லும் மின்சார ரெயில் கடற்கரை-தாம்பரம் இடையே பகுதி நேர ரத்து செய்யப்படுகிறது. செங்கல்பட்டில் இருந்து மேற்கண்ட தேதிகளில் இரவு 10.20, 11 ஆகிய நேரங்களில் புறப்பட்டு கடற்கரை வரும் மின்சார ரெயில் தாம்பரம்-கடற்கரை இடையே பகுதி நேர ரத்து செய்யப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.