திருவள்ளூரில் நிதி நிறுவனம் நடத்தி ரூ.30 கோடி மோசடி: அண்ணன் - தம்பி கைது

முதலீடு செய்ததற்கு ஏற்ப இருமடங்கு பணத்தையும் முதல் தடவை வழங்கினர். இதனால், சகோதரர்கள் மீது மக்களுக்கு நம்பிக்கை அதிகரித்தது.
திருவள்ளூரில் நிதி நிறுவனம் நடத்தி ரூ.30 கோடி மோசடி: அண்ணன் - தம்பி கைது
Published on

திருவள்ளூர் என்.ஜி.ஓ காலனியில் தனியார் நிதி நிறுவனம் இயங்கி வந்தது. கடந்த 5 ஆண்டுக்கு முன் இந்த நிதி நிறுவனம் அங்கு செயல்பட்டு வந்தது. இதனை வில்லிவாக்கம் பகுதியை சேர்ந்த அண்ணன் - தம்பியான கண்ணன் (52), கமலதாஸ் (49) ஆகியோர் நடத்தினர்.

இங்கு திருவள்ளூர், காக்களூர், புட்லூர், தண்ணீர்குளம், பெரிய குப்பம், மணவாளநகர் போன்ற சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து 200-க்கும் மேற்பட்ட பொது மக்கள் முதலீடு மற்றும் கடன் பெற அந்த நிதி நிறுவனத்தை நாடினார்கள்.

இந்த நிதி நிறுவனத்தில் மக்கள் முதலீடு செய்யும் பணம் இரட்டிப்பாகத் திருப்பித் தரப்படும் என கூறினர். இதை நம்பிய பொதுமக்கள் ஒவ்வொரு வரும் தங்கள் வசதிக்கேற்ப பணத்தை முதலீடு செய்தனர்.

முதலீடு செய்ததற்கு ஏற்ப இருமடங்கு பணத்தையும் முதல் தடவை வழங்கினர். இதனால், சகோதரர்கள் மீது மக்களுக்கு நம்பிக்கை அதிகரித்தது.

இதையடுத்து சகோதர்களிடம் முதலீடுகள் சேர்ப்பதற்கு நிறைய முகவர்கள் பணியில் சேர்ந்தனர். இவ்வாறாக 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சுமார் ரூ.28 கோடி முதல் ரூ.30 கோடி வரை அந்த நிதி நிறுவனத்தில் தங்கள் பணத்தை கட்டினார்கள்.

ஆனால் நிதி நிறுவனத்தினர் முதிர்வு தொகையை தராமல் மோசடி செய்து விட்டனர். இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் திருவள்ளூர் பொருளாதாரம் குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணயில் ஈடுபட்டனர்.

விசாரணையில் திருச்சி, மதுரை உத்தங்குடி, சிவகங்கை, கரூர், சேலம் போன்ற பல இடங்களில் இதே போன்று போலி நிதி நிறுவனம் நடத்தி பொதுமக்களை ஏமாற்றி பண மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து திருவள்ளூர் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கமலதாஸ், கண்ணன் ஆகியோரை கைது செய்தனர். தொடர்ந்து இதுபற்றி விசாரணை நடைபெற்று வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com