பரந்தூர் மக்களின் உரிமைகளும் வாழ்வாதாரமும் பாதுகாக்கப்பட வேண்டும்! - ராமதாஸ்

பரந்தூர் மற்றும் சுற்றுவட்டார கிராம மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் எந்த நடவடிக்கையையும் மாநில அரசும், மத்திய அரசும் மேற்கொள்ளக் கூடாது.
பரந்தூர் மக்களின் உரிமைகளும் வாழ்வாதாரமும் பாதுகாக்கப்பட வேண்டும்! - ராமதாஸ்
Published on

பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் வாழும் மக்கள் கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக தங்களது வாழ்வுரிமை, நில உரிமை மற்றும் எதிர்காலத் தலைமுறைகளின் நலனைப் பாதுகாக்கும் நோக்கில் தொடர்ந்து போராடி வருகின்றனர். பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டம் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்தே அப்பகுதி மக்கள் பல்வேறு ஜனநாயக ரீதியான போராட்டங்களையும் சட்டரீதியான நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகின்றனர். அந்த காலகட்டத்தில் நானும் அவர்களுக்காக குரல் கொடுத்தேன்.

பரந்தூர் பகுதி என்பது வெறும் நிலப்பரப்பு அல்ல; அது ஆயிரக்கணக்கான விவசாயக் குடும்பங்களின் வாழ்வாதாரமாகவும், பல தலைமுறைகளாக உழைத்து உருவாக்கப்பட்ட வளமான வேளாண் மண்டலமாகவும் விளங்குகிறது. அப்பகுதியில் உள்ள விளைநிலங்கள் உணவு உற்பத்திக்கு முக்கிய பங்களிப்பை வழங்கி வருகின்றன. இந்த நிலையில், விமான நிலையத் திட்டத்தால் ஏற்கனவே அச்சத்திலும் உறுதியற்ற நிலையிலும் வாழ்ந்து வரும் மக்களுக்கு தற்போது மீண்டும் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கப்பட உள்ளதாக பரவி வரும் தகவல்கள் மேலும் மன உளைச்சலையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளன.

ஒரு குடும்பம் தனது சொந்த ஊரிலிருந்து இடம்பெயர்வது என்பது வெறும் முகவரி மாற்றம் அல்ல. அது அவர்களின் சமூக வாழ்க்கை, பண்பாடு, உறவுகள், தொழில், பொருளாதாரம் மற்றும் மனநிலையையே பாதிக்கும் மிகப்பெரிய மாற்றமாகும். பல தலைமுறைகளாக வாழ்ந்து வந்த நிலத்திலிருந்து மக்களை அகற்றுவது எளிதான நிர்வாக நடவடிக்கை அல்ல என்பதை மாநில மற்றும் மத்திய அரசுகள் உணர வேண்டும்.

வளர்ச்சித் திட்டங்கள் அவசியமானவைதான். ஆனால் அவை மக்களின் வாழ்வாதாரத்தை அழித்தும், விவசாய நிலங்களை பறித்தும், உள்ளூர் மக்களின் உரிமைகளை புறக்கணித்தும் மேற்கொள்ளப்படக் கூடாது. மக்கள் விருப்பம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, உணவுப் பாதுகாப்பு மற்றும் சமூக நீதியை கருத்தில் கொண்டே எந்தத் திட்டமும் செயல்படுத்தப்பட வேண்டும்.

எனவே, பரந்தூர் மற்றும் சுற்றுவட்டார கிராம மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் எந்த நடவடிக்கையையும் மாநில அரசும், மத்திய அரசும் மேற்கொள்ளக் கூடாது. அப்பகுதி மக்களின் கருத்துக்களுக்கு உரிய மதிப்பளித்து, அவர்கள் வாழ்ந்து வரும் நிலங்களிலேயே பாதுகாப்பாகவும் கண்ணியமாகவும் வாழ்வதற்கான உத்தரவாதத்தை அரசுகள் வழங்க வேண்டும்.

மக்களின் உரிமைகளை மீறி, அவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் எந்தத் திட்டங்களும் திணிக்கப்படும் சூழல் ஏற்பட்டால், என் தலைமையில் மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் மாபெரும் ஜனநாயக ரீதியான போராட்டம் முன்னெடுக்கப்படும் என்பதை இவ்வறிக்கையின் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்.

பரந்தூர் மக்களின் உரிமை காக்கப்பட வேண்டும்; விவசாய நிலங்கள் பாதுகாக்கப்பட வேண்டும்; மக்களின் வாழ்வாதாரம் பறிக்கப்படக் கூடாது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com