

சென்னை மக்களுக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்றான புழல் ஏரி 21.20 அடி உயரமும் 3300 மில்லியன் கனஅடி நீரை சேமித்து வைக்க உதவும். இந்த ஏரி 5,200 ஏக்கர் பரப்பளவு கொண்டதாகும்.
இந்த ஏரி பொதுப்பணித்துறை அதிகாரிகள் பராமரிப்பில் உள்ளது. இந்நிலையில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக புழல் ஏரியை பொதுப்பணித்துறை அதிகாரிகள் முறையாக தூர்வாரி கரை அமைத்து பராமரிக்காததால் தற்போது புழல் ஏரி தரைமட்டமாக உள்ளது. இதனால் ஏரி 1½ கிலோமீட்டர் தூரத்துக்கும் மேல் தண்ணீர் இல்லாமல் வறண்டு காணப்படுகிறது. மேலும் புழல் ஏரி அமைக்கப்பட்ட காலங்களில் அளவிடப்பட்ட 3300 மில்லியன் கனஅடி அளவு தண்ணீரையே குறிப்பிடுகின்றனர் அதிகாரிகள். ஆனால் தற்போது நான்கு பக்கமும் ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் மற்றும் 30 ஆண்டுகளாக தூர்வாரி பராமரிக்காத காரணத்தால் 3300 மில்லியன் கன அடி தண்ணீரை சேமிக்க முடியாத நிலை இருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது.
மேலும் திருமுல்லைவாயல் அனுகிரகா நகர், பொத்தூர், பம்மதுகுளம், அம்பத்தூர் பானு நகர், கிழக்கு- மேற்கு ஓரகடம், பசும்பொன்நகர், முருகாம்பேடு, சண்முகபுரம், சூரப்பட்டு, புழல், செங்குன்றம் என பல பகுதிகளில் ஆயிரக்கணக்கான கட்டிடங்களால் சுமார் 500 ஏக்கருக்கும் மேல் புழல்ஏரி நிலம் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளதுடன் அதிகாரிகள் அலட்சியத்தால் ஒவ்வொரு ஆண்டும் பருவமழை காலங்களில் மழைநீரை சேமிக்க முடியாமல் வீணாகிறது. மேலும் பருவமழை காலங்களில் நகர் பகுதியில் இருந்து மழைநீருடன் கலந்து பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் இழுத்து வரப்படும் மணல், கற்களை பொதுப்பணித்துறையினர் அகற்றாததால் ஏரி முழுவதும் மணல் திட்டு நிரம்பி தற்போது தரைமட்டமாக கிரிகெட் மைதானம் போல் காட்சியளிக்கிறது.
இதனால் மழையில் முட்டளவு தண்ணீர் வந்தால் கூட புழல் ஏரி நிரம்பி வழிகிறது என்று தகவலை பரப்பிவிடுகின்றனர் பொதுப்பணித்துறை அதிகாரிகள். எனவே உடனடியாக புழல் ஏரியை மறு அளவீடு செய்தும் முறையாக தூர்வாரி ஏரியில் உள்ள ஆக்கிரமிப்பு மணல் கழிவுகள் மற்றும் கட்டிடங்களை முழுமையாக அகற்றி ஏரியை சுற்றி கரை அமைத்து ஒவ்வொரு ஆண்டும் மழைநீரை வீணடிக்காமல் சேமித்து வைத்தால் மட்டுமே வரும் காலங்களில் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க முடியும் என்கின்றனர் மக்கள்.