

உலக பிரபலமான நார்வே செஸ் போட்டி நார்வே நாட்டின் ஓஸ்லோ நகரில் நடந்தது. இந்த போட்டியில் இந்திய கிராண்ட் மாஸ்டரும் சென்னையை சேர்ந்தவருமான செஸ் வீரர் பிரக்ஞானந்தா கலந்து கொண்டு விளையாடினார்.
20 வயதான பிரக்ஞானந்தா இந்த போட்டி தொடரில் நம்பர் ஒன் செஸ் வீரரும், 7 முறை உலக சாம்பியன் பட்டத்தை வென்றவருமான கார்ல்சனை 2 முறை வீழ்த்தினார். இறுதியில் பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டத்தை வென்றார்.
இந்த வெற்றியின் மூலம் நார்வே செஸ் போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்று சாதனை படைத்தார் பிரக்ஞானந்தா.
இந்தியாவுக்கும், தமிழகத்துக்கும் பெருமை சேர்த்த பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, முதலமைச்சர் விஜய் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர். இந்த நிலையில் சென்னை திரும்பிய பிரக்ஞானந்தா தலைமை செயலகத்தில் முதலமைச்சர் விஜய்யை இன்று சந்தித்தார்.
அப்போது பிரக்ஞானந்தாவுக்கு சால்வை அணிவித்து பூங்கொத்து வழங்கி முதலமைச்சர் விஜய் பாராட்டினார்.
அப்போது நார்வே செஸ் தொடரில் வெற்றி பெற்றதற்காக வழங்கப்பட்ட கோப்பையை முதலமைச்சர் விஜய்யிடம் காண்பித்து வாழ்த்து பெற்றார்.
அதை தொடர்ந்து தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ரூ.50 லட்சத்துக்கான காசோலையை முதலமைச்சர் விஜய் வழங்கினார்.
பின்னர் முதலமைச்சரின் அறையில் முதலமைச்சர் விஜய்யுடன் பிரக்ஞானந்தா செஸ் விளையாடினார். அப்போது சாதுர்யமாக முதலமைச்சர் காய்களை நகர்த்தினார். பிரக்ஞானந்தாவும் அற்புதமாக காய்களை நகர்த்தி வென்றார். அதை பார்த்ததும் முதலமைச்சர் விஜய் சிரித்தபடியே கைதட்டி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதோடு அவருடன் கை குலுக்கி மகிழ்ந்தார்.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
விளையாட்டுத் துறையில் தமிழ்நாட்டை இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாக உருவாக்கிடும் வகையில், சர்வதேச மற்றும் தேசிய அளவிலான பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் தமிழ் நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கு கொண்டு வெற்றி பெறும் வகையில் அவர்களுக்கு உரிய பயிற்சி அளித்தல், பதக்கங்களை வெல்பவர்களுக்கு உயரிய ஊக்கத் தொகை வழங்குதல், விளையாட்டிற்கான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் என பல்வேறு முனைப்பான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு எடுத்து வருகிறது. முதலமைச்சர் விஜய்யின் தலைமையின் கீழ், தமிழ்நாடு அரசு, விளையாட்டை ஒரு சக்திவாய்ந்த சமூக மாற்றக் கருவியாகக் கருதி செயலாற்றி வருகிறது. இளைஞர்களின் ஆற்றலை ஆக்கப்பூர்வமான வழியில் செலுத்தி, ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஊக்குவித்து, சமூகத்தில் நேர்மறையான மாற்றத்தை உருவாக்குவதே அரசின் தலையாய நோக்கமாகும். தூய்மையான, நேர்மையான மற்றும் அறநெறி சார்ந்த விளையாட்டுக் கலாச்சாரத்தை வளர்த்தெடுப்பதில் தமிழ்நாடு அரசு உறுதி பூண்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில், அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி, கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தாவின் பெற்றோர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.