

தூத்துக்குடி போலீஸ் நிலையத்தில் மயங்கி விழுந்து உயிரிழந்த வாலிபர் உடல் பிரேத பரிசோதனை தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தொடங்கியது.
தூத்துக்குடி அமுதா நகர் பகுதியை சேர்ந்தவர் அருணாச்சலம்(வயது 24), இவர் கடந்த 17-ந் தேதி சட்டவிரோதமாக மது விற்பனை செய்ததை தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து தென்பாகம் போலீஸ் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்து சென்றனர்
இதைத் தொடர்ந்து போலீஸ் நிலையத்தில் இருந்து அவரை நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு தயார் செய்து கொண்டிருக்கும்போது வாலிபர் அருணாச்சலம் போலீஸ் நிலையத்தில் வைத்து வலிப்பு வந்து மயங்கி விழுந்ததாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
இந்நிலையில் அவரது தலையில் காயம் ஏற்பட்டதை தொடர்ந்து அவரை உடனடியாக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கே சிகிச்சை பலனின்றி அருணாச்சலம் நேற்று உயிரிழந்தார்.
இதைத் தொடர்ந்து அவரது உறவினர்கள் போலீஸ் நிலையத்தில் வைத்து போலீசார் அருணாச்சலத்தை தாக்கியதால் ஏற்பட்ட காயம் காரணமாகவே அவர் உயிரிழந்தார் என்று குற்றச்சாட்டு தெரிவித்து தென்பாகம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். மேலும் அருணாச்சலத்தின் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்
இதைத்தொடர்ந்து உறவினர்கள் இந்த சம்பவத்தில் தொடர்புடைய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், இந்த சம்பவம் தொடர்பாக நீதித்துறை நடுவர் முன்னிலையில் விசாரணை நடத்த வேண்டும், பிரேத பரிசோதனையை வீடியோ பதிவு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
இதைத்தொடர்ந்து அருணாச்சலத்தின் உடல் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பிரேத பரிசோதனை கூட்டத்திற்கு கொண்டுவரப்பட்டு இன்று காலை பிரேத பரிசோதனை தொடங்கியது.
பிரேத பரிசோதனை தொடங்குவதற்கு முன்பாக அருணாச்சலத்தின் தந்தை நாகராஜ் மற்றும் தம்பி சுடலைமணி உள்ளிட்ட உறவினர்கள் அவரது உடலை அடையாளம் காண்பிக்க வந்தனர். இதைத் தொடர்ந்து தூத்துக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவர் விஜய ராஜசேகர் முன்னிலையில் கன்னியாகுமரி, நெல்லை மற்றும் தூத்துக்குடி ஆகிய பகுதியில் இருந்து வந்துள்ள பிரேத பரிசோதனை சிறப்பு மருத்துவர் குழுவினர் பணியில் ஈடுபட்டனர். அருணாச்சலத்தின் உடல் பிரேத பரிசோதனை முழுவதும் வீடியோ மூலம் பதிவு செய்யப்பட்டு வருகிறது.