

உலக பிரபலமான நார்வே செஸ் போட்டி நார்வே நாட்டின் ஓஸ்லோ நகரில் நடந்தது. இந்த போட்டியில் இந்திய கிராண்ட் மாஸ்டரும் சென்னையை சேர்ந்தவருமான செஸ் வீரர் பிரக்ஞானந்தா கலந்து கொண்டு விளையாடினார்.
20 வயதான பிரக்ஞானந்தா இந்த போட்டி தொடரில் நம்பர் ஒன் செஸ் வீரரும், 7 முறை உலக சாம்பியன் பட்டத்தை வென்றவருமான கார்ல்சனை 2 முறை வீழ்த்தினார். இறுதியில் பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டத்தை வென்றார்.
இந்த வெற்றியின் மூலம் நார்வே செஸ் போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்று சாதனை படைத்தார் பிரக்ஞானந்தா.
இந்தியாவுக்கும், தமிழகத்துக்கும் பெருமை சேர்த்த பிரக்ஞானந்தாவுக்கு முதலமைச்சர் விஜய் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தார். இந்த நிலையில் சென்னை திரும்பிய பிரக்ஞானந்தா தலைமை செயலகத்தில் முதலமைச்சர் விஜய்யை இன்று சந்தித்தார்.
அப்போது பிரக்ஞானந்தாவுக்கு சால்வை அணிவித்து பூங்கொத்து வழங்கி முதலமைச்சர் விஜய் பாராட்டினார்.
அப்போது நார்வே செஸ் தொடரில் வெற்றி பெற்றதற்காக வழங்கப்பட்ட கோப்பையை முதலமைச்சர் விஜய்யிடம் காண்பித்து வாழ்த்து பெற்றார்.
அதை தொடர்ந்து தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ரூ.50 லட்சத்துக்கான காசோலையை முதலமைச்சர் விஜய் வழங்கினார்.
பின்னர் முதலமைச்சரின் அறையில் முதலமைச்சர் விஜய்யுடன் பிரக்ஞானந்தா செஸ் விளையாடினார். அப்போது சாதுர்யமாக முதலமைச்சர் காய்களை நகர்த்தினார்.
பிரக்ஞானந்தாவும் அற்புதமாக காய்களை நகர்த்தி வென்றார். அதை பார்த்ததும் முதலமைச்சர் விஜய் சிரித்தபடியே கைதட்டி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதோடு அவருடன் கை குலுக்கி மகிழ்ந்தார்.
இந்நிலையில், முதலமைச்சருடன் செஸ் விளையாடிய தருணம் மறக்க முடியாதது என பிரக்ஞானந்தா தனது சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:-
தலைமைச் செயலகத்திற்கு என்னை அழைத்து கவுரவப்படுத்திய தமிழ்நாடு முதல்வர் விஜய் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.
உங்களுடன் செஸ் விளையாடிய அனுபவம் மறக்க முடியாத தருணமாக இருந்தது. செஸ் விளையாட்டிற்கு நீங்கள் கொடுக்கும் தொடர் ஆதரவுக்கு நன்றி.
தமிழ்நாடு மற்றும் இந்தியாவை பெருமைபடுத்த தொடர்ந்து உழைப்பேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.