ஊழல் இல்லாத த.வெ.க.வின் காமராஜர் ஆட்சி 5 ஆண்டுகள் தொடர வேண்டும் - ப.சிதம்பரம்

காங்கிரசின் ஆதரவும், அரசுடனான அதன் உறவும், தமிழகத்தில் லஞ்சமில்லாத ஐந்து ஆண்டு கால நிர்வாகத்தைப் பெற உதவும்.
P Chidambaram
Published on

தமிழகத்தில் ஊழல் இல்லாத இந்த காமராஜர் ஆட்சி, 5 ஆண்டுகள் தொடர வேண்டும் என்று முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் கூறினார்.

காமராஜர் பிறந்தநாள் விழா

மதுரை வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரியில் நடந்த காமராஜர் பிறந்தநாள் விழா மற்றும் லஞ்சம் தவிர், நெஞ்சம் நிமிர் என்ற பிரசாரத்தின் நிறைவு விழா நடைபெற்றது. இதில் காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான ப.சிதம்பரம் கலந்து கொண்டு அவர் பேசியதாவது:-

காங்கிரஸ் ஆட்சி

தமிழ்நாட்டில் நடைபெற்ற காமராஜரின் 9 ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சியில் லஞ்சமே கிடையாது. காமராஜரின் ஆட்சிக்காலம் அரசாங்கக் கட்டுப்பாடு மற்றும் சிறந்த நிர்வாகத்தின் மூலம் லஞ்சத்தை ஒழிக்க முடியும் என்பதை நிரூபித்து காட்டியது.

அந்த ஒன்பது ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியில் லஞ்சம் என்ற பேச்சே இல்லை. எந்தவொரு அமைச்சருக்கு எதிராகவும், லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் எழவில்லை. அதேபோல் தமிழகத்தில் லஞ்ச ஒழிப்பில் தமிழக வெற்றிக்கழக அரசின் முதல் மாத செயல்பாடுகள், காமராஜரின் ஒன்பது ஆண்டுகால ஆட்சிக் காலத்தைப் போன்றது.

த.வெ.க. ஆட்சி

புதிதாக பொறுப்பேற்ற த.வெ.க. ஆட்சியில் பத்திரப் பதிவு அலுவலகம் முதல் தனியார் உதவி பள்ளி பெறும் பள்ளிகள், அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் நியமனம், இடமாறுதல் வரை லஞ்சம் தவிர்க்கப்பட்டுள்ளது. இன்னும் பல துறைகளில் லஞ்சம் தவிர்க்கப்பட வேண்டும். அதற்கான முயற்சிகளை முதலமைச்சர் விஜய் மேற்கொண்டு வருகிறார்.

நிச்சயம் முதலமைச்சர் விஜய்யின் அரசு அதனையும் சாதிக்கும் என்று தான் நம்புகிறோம். தமிழகத்தில் ஊழல் இல்லாத இந்த காமராஜர் ஆட்சி, 5 ஆண்டுகள் தொடர வேண்டும் என்றார். காங்கிரசின் ஆதரவும், அரசுடனான அதன் உறவும், தமிழகத்தில் லஞ்சமில்லாத ஐந்து ஆண்டு கால நிர்வாகத்தைப் பெற உதவும்.

இவ்வாறு அவர் பேசினார்.

மாணிக்கம் தாகூர்

நிகழ்ச்சியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் எம்.பி. பேசுகையில், காமராஜர் வாழ்நாள் முழுவதும் மாணவர்களின் கல்விக்காக உழைத்தார். ‘காமராஜர் மாடல்’ அரசை யாராலும் கொண்டு வர இயலாத நிலையில், தற்போது முதலமைச்சர் விஜய் கொண்டு வந்துள்ளது நம்பிக்கை அளிக்கிறது, என்றார்.

X

Maalai Malar
www.maalaimalar.com