

2026 தமிழ்நாடு சட்டசபை தேர்தல் முடிவுக்கு பிறகு அரசியல் களத்தில் பல்வேறு அதிரடி திருப்பங்கள் நடைபெற்று வருகி்னறன. தற்போது அடுத்த பரபரப்பான திருப்பமாக அ.தி.மு.க.வில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்னர் தி.மு.க.வில் இணைந்த ஓ.பன்னீர்செல்வம் விரைவில் தமிழக வெற்றிக்கழகத்தில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக, எடப்பாடி பழனிசாமியுடனான மோதல் காரணமாக அ.தி.மு.க.வில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் வெளியேற்றப்பட்டார். அதனைத் தொடர்ந்து பிப்ரவரி மாதத்தில் அவர் தி.மு.க.வில் இணைந்தார். ஆனால், தேர்தலில் தி.மு.க. தோல்வியடைந்து எதிர்க்கட்சி வரிசையில் அமர வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதாலும், தி.மு.க.வில் இதுவரை அவருக்கு எந்தவொரு முக்கியப் பதவியும் வழங்கப்படாததாலும் ஓ.பி.எஸ். கடும் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், தற்போதுள்ள தமிழக அரசியல் சூழ்நிலையில், த.வெ.க.வில் சென்று இணைவதே சிறந்தது என்று ரவீந்திரநாத் தனது தந்தை ஓ.பன்னீர்செல்வத்திடம் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்கு ஓ.பன்னீர்செல்வமும் பச்சைக்கொடி காட்டிவிட்டதாக கூறப்படுகிறது. தேர்தலுக்கு முன்பே ஓ.பன்னீர்செல்வம் த.வெ.க.வில் இணைய வேண்டும் என்பதே அவருடைய மகன் ரவீந்திரநாத்தின் விருப்பமாக இருந்தது.
ஓ.பன்னீர்செல்வம் சம்மதம் தெரிவித்ததை அடுத்து அடுத்தக்கட்ட நடவடிக்கையாக, த.வெ.க. பொதுச்செயலாளரும், அமைச்சருமான புஸ்ஸி ஆனந்த், அமைச்சர் ஆதவ் அர்ஜூனா ஆகியோரிடம் ரவீந்திரநாத் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக தெரிகிறது.
அமைச்சர்கள் இருவரும் ஓ.பன்னீர்செல்வத்தின் விருப்பத்தை முதலமைச்சர் விஜய்யிடம் கூற, அவரும் அதற்கு சம்மதம் தெரிவித்துவிட்டதாக கூறப்படுகிறது. தற்போதைய நிலையில், தென்மாவட்டங்களில்தான் த.வெ.க. வலுகுறைந்து காணப்படுகிறது. அதற்கு, முக்கிய அரசியல் முகம் அங்கு இல்லை என்று சொல்லப்படுகிறது. எனவே, அந்தக் குறையை ஓ.பன்னீர்செல்வம் மூலம் தீர்த்துக்கொள்வதுடன், கட்சியையும் வலுப்படுத்த முடியும் என்று த.வெ.க. தலைமை கருதுகிறது.
முன்னாள் முதலமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் இருந்ததால், த.வெ.க.வில் அவருக்கு முக்கிய பொறுப்பு வழங்கவும் முதலமைச்சர் விஜய் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. விரைவில், தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு த.வெ.க.வில் ஓ.பன்னீர்செல்வம் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இடைத்தேர்தலில் அதே தொகுதியில் த.வெ.க. சார்பில் மீண்டும் போட்டியிட ஓ.பன்னீர்செல்வம் திட்டமிட்டுள்ளார்.
மேலும் 2029-ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தேனி நாடாளுமன்ற தொகுதியில் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் த.வெ.க. சார்பில் களம் இறக்கப்படுவார் என்றும் கூறப்படுகிறது.
ஓ.பன்னீர்செல்வம் த.வெ.கவில் இணைவதன் மூலம் தேர்தலுக்கு பிறகு தி.மு.க.வில் இருந்து விலகி த.வெ.கவில் இணையும் முதல் நபர் ஆவார். சட்டசபை தேர்தல் முடிவுக்கு பிறகு அ.தி.மு.க. மற்றும் மற்ற கட்சிகளில் இருந்து விலகி த.வெ.க.வில் பலர் இணைந்துள்ள நிலையில், தி.மு.க.வில் இருந்து யாரும் இதுவரை விலகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.