பைக் டாக்சிக்கு அனுமதி கிடையாது-மீறி ஓட்டினால் அபராதம்: உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்!

இவை சாமானிய மக்கள், மாணவர்கள் மற்றும் வேலை தேடும் இளைஞர்களுக்குப் பகுதிநேர வாழ்வாதாரமாகவும், பயணிகளுக்குக் குறைந்த கட்டணத்தில் இலக்கை அடையும் வசதியாகவும் செயல்படுகின்றன.
bike taxi
Published on

தமிழகத்தில் அரசு உரிய கொள்கை முடிவை எடுக்கும் வரை பைக் டாக்சிகளை இயக்குவதற்கு அனுமதி கிடையாது என்றும், விதிகளை மீறி பைக் டாக்சிகளை இயக்கினால் கடும் அபராதம் விதிக்கப்படும் என்றும் மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு அதிரடியாகத் தெரிவித்துள்ளது.

மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஆர்.நவீன்குமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், தமிழகத்தில் ராபிடோ, ஓலா, உபர் உள்ளிட்ட செயலி அடிப்படையிலான பைக் டாக்சி சேவைகள் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இவை சாமானிய மக்கள், மாணவர்கள் மற்றும் வேலை தேடும் இளைஞர்களுக்குப் பகுதிநேர வாழ்வாதாரமாகவும், பயணிகளுக்குக் குறைந்த கட்டணத்தில் இலக்கை அடையும் வசதியாகவும் செயல்படுகின்றன.

இருப்பினும், இதற்கென மாநில அரசு தெளிவான விதிகளை வகுக்காததால், காவல்துறை மற்றும் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் பைக் ஓட்டுநர்களுக்கு ரூ.10,000 வரை அபராதம் விதித்து வாகனங்களைப் பறிமுதல் செய்கின்றனர். ஆனால், பைக் டாக்சி நிறுவனங்களை கட்டுப்படுத்தாமல், ஓட்டுநர்கள் மீது மட்டும் நடவடிக்கை எடுப்பது நியாயமற்றது. மத்திய அரசின் மோட்டார் வாகனத் திருத்தச் சட்டத்தின் வழிகாட்டுதலின்படி, தமிழக அரசு பைக் டாக்சிகளுக்கான கட்டுப்பாட்டு விதிகளை (Motor Vehicle Aggregator Guidelines) உடனடியாக உருவாக்க வேண்டும் என கோரப்பட்டது.

அரசு தரப்பு வாதம்:

இந்த வழக்கு நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன் மற்றும் ஆர்.சக்திவேல் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் வாதாடுகையில், பைக் டாக்சிகளை முறைப்படுத்துவது குறித்து ஆய்வு செய்ய போக்குவரத்துத் துறை, நிதித் துறை மற்றும் 'கும்டா' (CUMTA) பிரதிநிதிகள் அடங்கிய நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது.

கொள்கை முடிவு:

இந்த விவகாரத்தில் அரசு விரிவான கொள்கை முடிவு எடுக்க வேண்டியுள்ளது. கொள்கை முடிவு எடுக்கப்படும் வரை தமிழகத்தில் பைக் டாக்சிகளுக்கு அனுமதி கிடையாது. விதிகளை மீறி யாரேனும் பைக் டாக்சி இயக்கினால் தொடர்ந்து அபராதம் மற்றும் சட்டப்பூர்வ நடவடிக்கை தொடரும் எனத் தெரிவித்தார்.

பொதுமக்கள் விழிப்புணர்வு:

பைக் டாக்சிகளுக்குத் தற்போது அனுமதி இல்லை என்றால், அதை பொதுமக்கள் தெரிந்துகொள்ளும் வகையில் அரசு விளம்பரப்படுத்தவோ அல்லது விழிப்புணர்வு ஏற்படுத்தவோ கூடாது. பைக் டாக்சிகளில் பயணத்தின் போது விபத்து ஏதும் ஏற்பட்டால், அதற்கு யார் பொறுப்பேற்பது? பயணிகளின் பாதுகாப்பு மிகவும் முக்கியமானது.

விரைவு முடிவு:

பைக் டாக்சிகளுக்கு அனுமதி வழங்கப்படுமா அல்லது நிராகரிக்கப்படுமா என்பது குறித்து அரசு விரைந்து கொள்கை முடிவெடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டனர். மனுதாரர் தரப்பில் மத்திய அரசு சட்டப்படியும் வழிகாட்டுதலின்படியும் பைக் டாக்சிகளுக்கு அனுமதி உள்ளதாக வாதிடப்பட்ட நிலையில், இந்த வழக்கு குறித்த அடுத்தகட்ட விசாரணைகள் மற்றும் கொள்கை முடிவு அறிவிப்புகளைத் தலைமை நீதிமன்றம் உற்றுநோக்கி வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com