வறண்ட வாய்க்காலில் மலர்வளையம் வைத்து, மெழுகுவர்த்தி ஏந்தி விவசாயிகள் வினோத போராட்டம்

தமிழக உரிமைகளை நிலைநாட்டாமல் தமிழக முதலமைச்சர் மவுனம் காப்பதாக விவசாயிகள் குற்றம் சாட்டினர்.
விவசாயிகள் போராட்டம்
விவசாயிகள் போராட்டம்
Published on

டெல்டா பாசனத்திற்காக ஆண்டுதோறும் மேட்டூர் அணை ஜூன் 12-ந்தேதி திறக்கப்படுவது வழக்கம். குறிப்பிட்ட தேதியில் அணை திறந்தால் குறுவை சாகுபடி பரப்பளவு அதிகரிக்கும். தாமதமாக திறந்தால் சாகுபடி பரப்பளவு குறையும்.

கடைமடை விவசாயிகள் வேதனை

கடந்த ஆண்டில் குறிப்பிட்ட தேதியில் மேட்டூர் அணை திறக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு அணை இன்று (வெள்ளிக்கிழமை) திறக்க வேண்டும். ஆனால், திறக்கப்படவில்லை. இதனால் டெல்டா மாவட்டங்களின் கடைமடை பகுதியான நாகை விவசாயிகள் கடும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்துள்ளனர்.

மலர்வளையம் வைத்து...

இந்த நிலையில், நாகப்பட்டினம் மாவட்டம், திருப்பூண்டியை அடுத்துள்ள மீனம்பநல்லூர் பகுதியில் உள்ள சந்திர நதி முற்றிலும் வறண்டு காய்ந்து கிடக்கிறது.

இந்த நிலையில், அங்கு இன்று காலை விவசாயிகள் திரண்டனர். பின்னர், அவர்கள் மேட்டூர் அணை திறக்கப்படாததை கண்டித்து, அங்கிருந்து பேரணியாக புறப்பட்டு, மீனம்பநல்லூர் கதவணை பகுதிக்கு வந்து, தண்ணீரின்றி வறண்ட வாய்க்காலுக்கு மலர்வளையம் வைத்தும், மெழுகுவர்த்தி ஏந்தியும் அஞ்சலி செலுத்தி வினோத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முதலமைச்சருக்கு கோரிக்கை

பின்னர், அவர்கள் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய 19 டி.எம்.சி தண்ணீரை வழங்க மறுக்கும் கர்நாடக அரசுக்கு எதிராக கண்டனம் தெரிவித்தனர்.

தமிழக உரிமைகளை நிலைநாட்டாமல் தமிழக முதலமைச்சர் மவுனம் காப்பதாக விவசாயிகள் குற்றம் சாட்டினர். டெல்டா விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்க, முதலமைச்சர் உடனடியாக தலையிட்டு கர்நாடக அரசிடம் இருந்து உரிய தண்ணீர பெற்றுத்தர வேண்டும் என வலியுறுத்தினர்.

X

Maalai Malar
www.maalaimalar.com