ராமநாதபுரம் மீனவர் சங்கம் மாநாட்டில் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு- அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தகவல்

உரிமைகள் மற்றும் சுதந்திரம் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வது குறித்தும் இலங்கை அதிபரை வலியுறுத்திட கேட்டுக்கொண்டார்.பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் ராமநாதபுரத்தில் ஆகஸ்ட் மாதம் 18-ந் தேதி மாநில மாநாடு நடத்த உள்ளது.
ராமநாதபுரம் மீனவர் சங்கம் மாநாட்டில் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு- அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தகவல்
Published on

சென்னை:

அமைச்சர் அனிதா ராதா கிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தமிழ்நாட்டைச் சேர்ந்த ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் பகுதியைச் சேர்ந்த 9 மீனவர்கள் நெடுந்தீவு பகுதியில் இலங்கை கடற்படையினரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை கடற்படையினரால் தமிழ்நாட்டு மீனவர்கள் கைது செய்யப்படுவதும், தாக்கப்படுவதும், அவர்க ளது படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமருக்கும், ஒன்றிய வெளியுறவுத் துறை மந்திரிக்கும் தொடர்ந்து கடிதம் மூலமாகவும், தொலைபேசி வாயிலாகவும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வருகிறார். இருந்தபோதிலும் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், கடந்த 20-ந்தேதி பிரதமருக்கு எழுதிய கடிதத்தில், இந்தியாவிற்கு வருகை தந்த இலங்கை அதிபரிடம், இந்திய மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை பாதுகாத்திடவும், தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் அடிக்கடி தாக்கப்படுவது குறித்தும், கைது செய்யப்படுவது குறித்தும், இலங்கையில் வாழும் தமிழ் மக்களின் கோரிக்கைகளை நிறை வேற்றி அவர்களது உரிமைகள் மற்றும் சுதந்திரம் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வது குறித்தும் இலங்கை அதிபரை வலியுறுத்திட கேட்டுக்கொண்டார்.

மேலும், வெளியுறவுத் துறை மந்திரியை தமிழ் நாட்டைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பு கொண்டு, தமிழக மீனவர்கள் சந்தித்து வரும் பிரச்சினைகள் குறித்து இந்தியாவிற்கு வருகை தந்த இலங்கை அதிபரிடம் பேச வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்நிலையில், மீனவர்களின் வாழ்வாதார பிரச்சினைகள் தொடர்பாக தமிழ்நாட்டின் அனைத்து மீனவர் சங்கங்கள் ஒன்றிணைந்து, தமிழ்நாடு மீனவர்கள் தொடர்ச்சியாக கைது செய்யப்படுவது, தாக்கப்படுவது, அவர்களது படகுகள் பறிமுதல் செய்யப்படுவது போன்ற நடவடிக்கைகளை கண்டித்தும், அதனை தடுத்திட கோரியும், மேலும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் ராமநாதபுரத்தில் ஆகஸ்ட் மாதம் 18-ந் தேதி மாநில மாநாடு நடத்த உள்ளது.

இம்மாநில மாநாட்டில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்து கொள்ள வேண்டும் என்று மீனவர் சங்கங்களின் பிரதிநிதிகள் அழைப்பு விடுத்துள்ளனர். அவர்களின் அழைப்பினை ஏற்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆகஸ்ட் 18-ந்தேதி ராமநாதபுரத்தில் நடைபெறவுள்ள மீனவர் சங்கங்களின் மாநில மாநாட்டில் கலந்து கொள்ள இசைவு தெரிவித்துள்ளார்

இவ்வாறு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com