நாகை எம்.பி. செல்வராஜ் மறைவு: முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல்

நாகை தொகுதி எம்.பி.யான செல்வராஜ் இன்று உடல்நலக் குறைவால் காலமானார்.இவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
நாகை எம்.பி. செல்வராஜ் மறைவு: முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல்
Published on

சென்னை:

நாகை பாராளுமன்ற தொகுதி எம்.பி.யான செல்வராஜ் இன்று அதிகாலை 2 மணியளவில் உடல்நலக் குறைவால் காலமானார். கடந்த சில மாதமாக நுரையீரல் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:

நாகப்பட்டினம் பாராளுமன்ற உறுப்பினரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசிய குழு உறுப்பினருமான செல்வராஜ் மறைவெய்திய செய்தி அறிந்து மிகவும் வேதனையடைந்தேன்.

1975-ம் ஆண்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்த செல்வராஜ் சுமார் அரை நூற்றாண்டு காலம் பொதுவுடைமை இயக்கத்தில் தன்னை முழுமையாக ஒப்படைத்துக் கொண்டு செயல்பட்டு வந்தவர் ஆவார். செல்வராஜ் 4 முறை நாகை பாராளுமன்ற தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினராக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுச் சிறப்பாகப் பணியாற்றியுள்ளார்.

டெல்டா மாவட்டங்களுக்கு ரெயில்வே திட்டங்கள் வேண்டியும், அப்பகுதி வேளாண் மக்களின் உரிமைகளுக்காகவும் பல போராட்டங்களை செல்வராஜ் முன்னெடுத்துள்ளார்.

என் மீது கொள்கைரீதியாகவும், தனிப்பட்ட முறையிலும், இருவரும் டெல்டாகாரர்கள் என்ற வகையிலும் மிகுந்த பாசமும் நன்மதிப்பும் கொண்டவர் செல்வராஜ். கடந்த ஆகஸ்டு மாதம்தான் செல்வராசின் இல்லத் திருமண விழாவில் பங்கேற்று உரையாற்றியிருந்தேன்.

கடந்த சில மாதங்களாகவே உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த செல்வராஜ் மறைவு பொதுவுடைமை இயக்கத்துக்கும், டெல்டா மக்களுக்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்களுக்கும், நாகை தொகுதி மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com