

பழனி முருகன் கோவிலுக்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் இன்று ஆய்வு செய்ய சென்றார். ஏற்கனவே கடந்த வாரம் திருச்செந்தூர் கோவிலில் ஆய்வுப்பணிக்காக சென்ற போது அவரிடமே தரிசனத்துக்கு பணம் பெற்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இன்று அதிகாரிகள் அது போன்ற எந்த சம்பவமும் நடைபெற்று விடக்கூடாது என தீவிரமாக பணியாற்றினர்.
பழனி - கொடைக்கானல் சாலையில் மலைக்கோவிலுக்கு செல்லும் பாதையில் ரூ.53 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டு இருந்த அலங்கார தோரண வாயிலை அமைச்சர் ரமேஷ் திறந்து வைத்தார்.
அதனைத் தொடர்ந்து எம்.எல்.ஏ. ராக்கால நந்தவனம் திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றார். இந்த நந்தவனத்தில் பராமரிக்கப்படும் பூக்கள் அனைத்தும் பழனி கோவில் பூஜைகளுக்காக பயன்படுத்தப்படுகிறது. இந்த நந்தவனத்தில் அனைத்து வகையான பூக்களும் நட்டு பராமரிக்கப்படுகிறது.
இந்த நந்தவனத்தை திறந்து வைப்பதற்காக வைக்கப்பட்டு இருந்த பேனரில் உள்ளூர் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ரவி மனோகரன் பெயர் விடுபட்டு இருந்தது. இதனால் ரவி மனோகரன் எம்.எல்.ஏ. நிகழ்ச்சியில் பங்கேற்காமல் ஒதுங்கி நின்றார். அப்போது அங்கிருந்த அ.தி.மு.க. நிர்வாகிகள் சிலர் இது குறித்து அமைச்சர் ரமேஷ் கவனத்துக்கு கொண்டு சென்றனர். அவர் கோவில் அதிகாரிகள் மற்றும் அறங்காவலர்களை நேரில் அழைத்து உள்ளூர் மக்கள் பிரதிநிதி பெயரை ஏன் போடவில்லை என கண்டித்தார்.
இனிமேல் இது போன்ற செயலில் ஈடுபடக்கூடாது எனவும் எச்சரித்தார். அதனைத் தொடர்ந்து ரவி மனோகரன் எம்.எல்.ஏ.விடம் நேரில் சென்று அதிகாரிகளின் தவறுக்காக தான் வருத்தம் தெரிவித்துக் கொள்வதாக கூறினார். அதன் பிறகு நடந்த ஆய்வுக்கூட்டத்தில் எம்.எல்.ஏ.வும் பங்கேற்றார்.
பின்னர் பெருந்திட்ட வளாக பகுதியில் சமீபத்தில் 58 ஏக்கர் கோவில் பணிகளுக்காக கைப்பற்றப்பட்டது. அந்த இடத்தை அமைச்சர் ரமேஷ் பார்வையிட்டார். இப்பகுதியில் கோவிலுக்கு வரும் பக்தர்களின் வாகனங்கள் நிறுத்துமிடம், வணிக வளாக கட்டிடம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற உள்ளது. அதனையும் கேட்டறிந்தார்.
காத்திருப்போர் கூடத்துக்குள் சென்ற அமைச்சர் பக்தர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அப்போது மின் இழுவை ரெயில் நிலையம் செல்ல நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியது உள்ளதாக பக்தர்கள் தெரிவித்தனர். பின்னர் அங்குள்ள குடிநீர் மற்றும் சுகாதார வசதிகளை ஆய்வு செய்தபோது பக்தர்களுக்கு தடையின்றி குடிநீர் கிடைக்கவில்லை என்பதும், போதிய கழிப்பிட வசதிகள் இல்லை என்பதும் தெரிய வந்தது. அமைச்சர், இவ்வளவு நேரம் காத்திருந்தும் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் இல்லாமல் என்ன செய்வார்கள்? இதையெல்லாம் கவனிக்க மாட்டீர்களா? என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பி கடிந்து கொண்டார். மேலும் அங்கு வைக்கப்பட்டு இருந்த சுத்திகரிக்கப்பட்ட குடிநீரின் தரத்தையும் அதில் உள்ள உப்பின் அளவையும் நேரடியாக சோதித்து பார்த்தார்.
பழனி அடிவாரம் மின் இழுவை ரெயில் நிலைய காத்திருப்பு கூடத்தில் பக்தர்கள் அமர வேண்டிய இடத்தில் தெருநாய்கள் அலைந்ததையும், கட்டிட பொருட்கள் சிதறிக்கிடந்ததையும் கண்டு கோபப்பட்ட அமைச்சர் ரமேஷ் இதற்கெல்லாம் பொறுப்பான அதிகாரியின் பெயரை குறித்து வைத்துக் கொள்ளுங்கள் என தனது உதவியாளரிடம் தெரிவித்தார்.
அப்போது அங்கிருந்த பக்தர்கள் தங்களுக்கு நேரும் அவதிகளை அமைச்சரிடம் தெரிவித்தனர். குறிப்பாக நூற்றுக்கணக்கான பக்தர்கள் மற்றும் குழந்தைகள் காத்திருக்கும் அறையில்தான் தெருநாய்கள் அதிக அளவில் சுற்றித் திரிகின்றன.
இதனால் இங்கு தங்குவதற்கு அச்சமாக உள்ளது என்றும் தெரிவித்தனர். பக்தர்கள் காத்திருக்கும் இடத்தில் அவர்களை நாய் கடித்தால் யார் பொறுப்பேற்பது? இத்தனை அலட்சியத்தோடு ஏன் செயல்படுகிறீர்கள்? என கேள்வி எழுப்பினார். அமைச்சரின் அடுத்தடுத்த கேள்விகளால் பதில் சொல்ல முடியாமல் அங்கிருந்த அதிகாரிகள் மற்றும் மேற்பார்வையாளர்கள் திணறினர்.
அதன் பின்பு பஞ்சாமிர்தம் தயாரிக்கும் கூடத்துக்கு சென்று ஆய்வு செய்தார். மேலும் மலைக்கோவிலுக்கு சென்ற அமைச்சர் அங்கு நாள் முழுவதும் பக்தர்களுக்கு வழங்கப்படும் அன்னதானத்தின் தரம் குறித்து அதனை சாப்பிட்டு ஆய்வு செய்தார். மொத்தத்தில் திருச்செந்தூரைப் போலவே பழனியிலும் அமைச்சர் ரமேஷ் நடத்திய ஆய்வு அதிகாரிகளை கதிகலங்க வைத்தது.