அரசு பள்ளிகளில் சாதி கயிறுகளுக்கு தடை; காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்-அமைச்சர் ராஜ்மோகன்

பள்ளி வளாகத்திற்குள் சமத்துவத்தைப் பேண இந்த அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Minister Raj Mohan’s Bold Move
Published on

தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தவெக அரசின் பள்ளிக்கல்வி மற்றும் செய்தி மக்கள் தொடர்புத்துறை அமைச்சர் ராஜ்மோகன், அரசுப் பள்ளிகளின் தரம் மற்றும் மாணவர்களின் ஒழுக்கம் குறித்து முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர், ஆசிரியர் காலிப்பணியிடங்கள் மற்றும் பள்ளிகளில் நிலவும் தற்போதைய சூழல் குறித்துப் பேசிய விவரங்கள் பின்வருமாறு:

மதுரையில் செய்தியாளர் சந்திப்பின் போது அமைச்சர் ராஜ்மோகன் மிக முக்கியமாக, "பள்ளிகளில் மாணவர்கள் சாதி கயிறு அணிவதை அனுமதிக்க முடியாது" என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். பள்ளி வளாகத்திற்குள் மாணவர்கள் மத்தியில் சாதிப் பாகுபாடுகள் நுழைவதைத் தடுக்கவும், சமத்துவத்தைப் பேணவும் இந்த அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படாத வண்ணம், தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களின் அனைத்து காலிப்பணியிடங்களும் மிக விரைவில் போர்க்கால அடிப்படையில் நிரப்பப்படும் என்றும், ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் இதற்கான பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன என்று உறுதியளித்துள்ளார்.

மேலும், கடந்த ஆட்சிக் காலத்தில் தங்களின் கோரிக்கைகளுக்காகப் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மீது உள்நோக்கத்தோடு போடப்பட்ட அனைத்து வழக்குகளையும் தற்போதைய அரசு முழுமையாகத் திரும்பப் பெறும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும், தனியார் பள்ளிகள் அரசு நிர்ணயித்த கட்டண விவரங்களை தங்களது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட வேண்டும். பெற்றோர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். முந்தைய ஆட்சிகளைப் போல தனியார் பள்ளிகள் எந்தவொரு காரியத்திற்கும் 3ஆம் நபர்கள் மூலமாக லஞ்சம் கொடுக்க வேண்டிய அவசியம் தற்போதைய ஆட்சியில் இருக்காது. முழுமையான வெளிப்படைத்தன்மை கடைப்பிடிக்கப்படும்.

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் படிப்படியாக 'ஸ்மார்ட் போர்டுகள்' மற்றும் நவீன ஆய்வகங்கள் கொண்டு வரப்படும்.

அதுமட்டுமல்லாமல், பள்ளி மாணவர்களின் ஒழுக்கம் மற்றும் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, பள்ளி வளாகங்களுக்கு அருகில் இருக்கும் மதுபானக் கடைகளை அகற்றுவது குறித்து அமைச்சர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.

"பள்ளி மற்றும் கல்வி நிறுவனங்களின் அருகே விதிகளை மீறி செயல்பட்டு வரும் மதுபானக் கடைகளை உடனடியாக மூடுவதற்கு அல்லது வேறு இடத்திற்கு இடமாற்றம் செய்வதற்குத் தகுந்த சட்டப்பூர்வ நடவடிக்கைகள் விரைந்து மேற்கொள்ளப்படும்." என அமைச்சர் ராஜ்மோகன் கூறினார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com