ஏஐ மூலம் தவறாக சித்தரிக்கப்படும் தலைவர்கள் - மு. வீரபாண்டியன் கண்டனம்

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, முதலமைச்சர் விஜய்மீதான தனிநபர் தாக்குதல்களுக்கு மு.வீரபாண்டியன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஏஐ மூலம் தவறாக சித்தரிக்கப்படும் தலைவர்கள் - மு. வீரபாண்டியன் கண்டனம்
Published on

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நடப்பதற்கு முன்பும், தேர்தல் முடிவடைந்த பின்னரும் திமுக மீதான தனிநபர் தாக்குதல் என்பது தொடர்ந்து வருகிறது.

அரசியலில் கருத்தியல்ரீதியான, சிந்தாந்தரீதியான விமர்சனங்களை முன்வைக்கமால், அக்கட்சியின் செயலை விமர்சிப்பதற்குப் பதிலாக, அக்கட்சி தலைவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை, குணத்தை, தோற்றத்தை கொச்சைப்படுத்தி பல்வேறு விதமான பதிவுகள் இணையத்தில் வெளிவருவது என்பது சமீப நாட்களாக அதிகமாகி உள்ளது.

அரசியல் வரலாறு தெரியாதவர்கள்கூட, இந்த தேர்தலுக்காக மட்டும் திடீர் ஞானம்பெற்று முக்கிய அரசியல் தலைவர்களை விமர்சித்து வந்தனர், வருகின்றனர்.

குறிப்பாக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிமீது இந்த தாக்குதல் தொடர்ந்து வருகிறது. இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஏஐ மூலம் அவரது புகைப்படத்தை மோசமாக சித்தரித்து வெளியிட்டு வருகின்றனர். கருணாநிதியைத் தொடர்ந்து முதலமைச்சர் விஜய், சீமான் உள்ளிட்டோரையும் மோசமாக சித்தரித்து பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இந்த செயல்பாடுகளுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத்தலைவர் மு.வீரபாண்டியன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

நாட்டின் மதிப்புமிக்க அரசியல் தலைவராக வாழ்ந்து மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் கண்ணியத்தை சிதைத்து, அவமதிக்கும் முறையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, அவரது படத்தை மிக மோசமாக சித்தரித்து சமூக ஊடகங்களில் பதிவிடப்பட்டுள்ளது.

இந்த அநாகரீகமான பதிவைக் கண்டவர்கள் எவரும் கண்டனம் செய்யாது இருக்க முடியாது. கருணாநிதியின் கண்ணியத்தை சிதைக்கும் அற்பத்தனமான பதிவுக்கு எதிர்வினையாக, தமிழ்நாடு அரசின் முதல்-அமைச்சர் ஜோசப் விஜயை அநாகரிகமாக சித்தரிக்கும் பதிவுகளும் சமூக ஊடகங்களில் உலாவி வருகின்றன.

அறிவியல் தொழில்நுட்பத்தின் நிகழ்கால உச்சமாக வளர்ந்திருப்பது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமாகும். இதனால் ஏற்படும் எதிர்மறை விளைவுகளை தடுப்பது எப்படி? என்ற வினாவிற்கு விடை தேடி, உலக நாடுகளும், அறிஞர்களும் விவாதித்து வருகின்றனர்.

இந்த அற்புதமான தொழில்நுட்பத்தை, சமூகம் மதித்து போற்றி வரும் அரசியல் தலைவரான, எழுத்தும் பேச்சும் ஒரு சேர கைவரப்பெற்று திகழ்ந்தவரான, நாட்டின் மூத்த அரசியல் தலைவர்களால் "சிறந்த ராஜியவாதி" என ஏற்றுக் கொள்ளப்பட்டவரான,

சமூகநீதி ஜனநாயக நெறியில் நின்று அரசு நிர்வாகத்தை முன்னெடுத்த திறன் மிக்க அரசுத் தலைவராக வாழ்ந்தவருமான கருணாநிதி போன்ற, போற்றுதலுக்குரிய மனிதர்களையும், உயர் பொறுப்பில் உள்ளோரை இழிவுபடுத்துவது அறிவுடையோர் செய்யும் செயலாகாது.

இது போன்ற அநாகரீகமான குற்றங்கள் நேரும்போது, சமூகம் ஒட்டுமொத்தமாக இணைந்து கண்டிக்க வேண்டும். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் பிறரை இழிவுபடுத்தும், தரம் தாழ்ந்தச் செயலை இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com