நானும் கோட் ஷூட் போட்டால்.., முதல்வர் விஜயை சீண்டிய விஜய பிரபாகரன்

Vijay Prabhakaran
Cauvery Protest Politics: Vijay Prabhakaran slams CM Vijay over Karnataka issue
Published on

விஜய பிரபாகரன் ஆவேசம்

காவிரியில் மேகதாது அணை கட்ட துடிக்கும் கர்நாடக அரசை எதிர்த்து தேமுதிக சார்பில் ஒகேனக்கல் காவிரி அருகே போராட்டம் நடத்தப்பட்டது. இந்த போராட்டத்தில் அக்கட்சியின் இளைஞரணி செயலாளர் விஜய பிரபாகரன் கலந்து கொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது:-

முன்னாள் தி.மு.க. ஆட்சியை போடோ ஷூட் நடத்துவதாக கூறினார்கள். ஆனால் இன்றைக்கு இருக்கக்கூடிய, நமது முதல்வர் விஜய் அவர்கள் என்ன செய்கிறார்?. ஒகேனக்கலுக்கு வந்து ஏன் உங்களால் மக்களை சந்திக்க முடியவில்லை.

கடந்த ஐ.பி.எல். போட்டியில் கோப்பை வென்றபோது, விராட் கோலியை கர்நாடகாவிற்கு வரும்படி அம்மாநில முதல்வர் கூறினார். அன்றைக்கு அங்கு பல உயிரிழப்புகள் நிகழ்ந்தன. அப்போதும் நிலைமை மோசமாகத்தான் இருந்தது.

காவிரி பிரச்சனை

ஆனால் முதல்வர் விஜயை தற்போது மட்டும் கர்நாடகாவிற்கு வரவேண்டாம், நிலைமை மோசமாக இருக்கிறது என்று டி.கே. சிவகுமார் கூறுகிறார்.

தனது வாழ்க்கையை மக்களுக்காக அர்ப்பணித்த ஒரே தலைவர் விஜயகாந்த் தான்.

இன்றைக்கு நானும் கோட் ஷூட் கண்ணாடி எல்லாம் போட்டால், நானும் அழகாகதான் இருப்பேன். முதல்வர் விஜய் கர்நாடகாவிற்கு முதலில் செல்லுங்கள்.

இன்றைக்கு ஜனநாயகன் ஓடவில்லை என்றால் மட்டும் எல்லாரும் கண்ணீர் விடுகிறார்கள் என்று முதல்வர் கூறுகிறார். தவெக கட்சியை சேர்ந்தவர்கள் எல்லாரும் கர்நாடகாவை நோக்கி ஓடு ஓடு என்று ஓடுங்கள்.

உண்மையான வேட்டைக்காரன் வீரப்பன் இல்லாதது வருத்தமாக உள்ளது. அவர் தான் உண்மையான வேட்டைக்காரர்.

இன்றைக்கு வீரப்பன் இல்லை, ஆனால் நான் உங்களுடன் கடைசி வரை இருப்பேன்.

இந்த காவிரி உங்களுக்கு மட்டும் அல்லது எங்களுக்கு மட்டும் கிடையாது. நாம் அனைவருக்கும் பொதுவானது.

நீட் தேர்வு போராட்டம்

நீட் தேர்விற்கு எதுக்கு சீன் போடுகிறீர்கள். இதை நாம் பின்னால் பிரதமர் மோடியிடம் கேட்கலாம். இன்றைக்கு கர்நாடகாவில் ஆட்சி நடத்துவது காங்கிரசாக உள்ளது.

இன்றைக்கு திமுக-வால் வென்ற காங்கிரஸ் கட்சி, தவெக பக்கம் உள்ளது. இந்த நிலையில் கர்நாடகா மற்றும் தமிழ்நாடு ஆகிய இரண்டு மாநிலத்திலும் காங்கிரஸ்தான் ஆட்சியில் உள்ளது.

எனவே இந்த பிரச்சனைக்கு ராகுல் காந்திதான் பதில் கூற வேண்டும், மோடி கிடையாது. இப்படித்தான் நம்ம மக்களை திருப்புகிறார்கள்.

அதற்காக பாரதிய ஜனதா கட்சிக்கு ஆதரவு என்ற சொல்ல வரவில்லை. பிரதமர் மோடியும் இந்த பிரச்சனைக்கு தீர்வு கொண்டு வர வேண்டும்.

நீட் தேர்விற்கு எதிராக போராடிய அபிஜீத் தீப்கேவிடம் நான் ஒன்றை கேட்கிறேன். டெல்லி வரை போராட முடிந்த உன்னால், தமிழ்நாட்டிற்குள் நுழைய முடியவில்லை.

ஏனென்றால் முட்டாள்கள் அங்கே அதிகம், தமிழ்நாட்டில் அறிவாளிகள்தான் அதிகமாக உள்ளனர். முட்டாள் கூட்டத்தை நீங்கள் ஏமாற்றலாம், ஆனால் அறிவாளிகள் கூட்டத்தை ஏமாற்ற முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com