

தமிழக முதல்வர் விஜய்யை அச்சுறுத்தும் தொனியில் பேசிய விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயனுக்கு 15 நாள் நீதிமன்ற காவல் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
கோவில்பட்டியில் திமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக்கூட்டத்தில், தமிழக முதலமைச்சர் விஜயை அச்சுறுத்தும் வகையிலான கருத்துக்களைத் தெரிவித்தற்காக, தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் இன்று, விளாத்திகுளம் திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி. மார்க்கண்டேயனைக் கைது செய்தனர்.
சட்டமன்றத் தேர்தலில் திமுக-விற்கு வாக்கு செலுத்தியவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் சனிக்கிழமை கூட்டம் நடைபெற்றது.
திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மற்றும் முன்னாள் அமைச்சர் பி.கீதா ஜீவன் உள்ளிட்ட பல திமுக தலைவர்களும் இதில் கலந்துகொண்டனர்.
இதையடுத்து விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டேயன், தமிழக முதல்வரை அச்சுறுத்தும் வகையில் சில கருத்துக்களைத் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து, தமிழக வெற்றிக் கழகத்தின் வடக்கு மாவட்டச் செயலர் பாலசுப்ரமணியன், தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு போலீஸில் ஞாயிற்றுக்கிழமை புகார் அளித்தார்.
அதனைத் தொடர்ந்து, இன்று காலை, விளாத்திகுளத்தில் உள்ள மார்க்கண்டேயனின் விட்டிற்கு சென்று போலீசார் அவரைக் கைது செய்தனர்.
பின்னர் அவர் மேல் விசாரணைக்காக தூத்துக்குடியில் உள்ள காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
இதையடுத்து மூன்று பிரிவுகளின் கீழ் போலீசார் அவர் மீது வழக்குப் பதிவு செய்தனர். திமுக எம்.எல்.ஏ கைது நடவடிக்கைக்கு எதிராக, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கீதா ஜீவன் மற்றும் 100க்கும் மேற்பட்ட திமுக தொண்டர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து முன்னாள் அமைச்சரான அனிதா ராதாகிருஷ்ணனும் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வந்து, கைது செய்யப்பட்ட மார்க்கண்டேயனைச் சந்திக்க வேண்டும் என்று கூறினர். ஆனால், காவல்துறை அந்தக் கோரிக்கையை நிராகரித்தது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அனிதா ராதாகிருஷ்ணன், “மார்க்கண்டேயனை முன்னறிவிப்பின்றி காலை 6 மணிக்கு காவல்துறை கைது செய்துள்ளனர்.
இது நீண்ட காலம் நீடிக்காது. அதிகபட்சமாக, இந்த அரசாங்கம் இன்னும் நான்கு மாதங்களுக்கு நீடிக்கலாம். அதுவரை மட்டுமே காவல்துறையால் இந்த முறையில் செயல்பட முடியும்," என்று அவர் கூறினார்.
இந்நிலையில் தமிழக முதலமைச்சர் விஜய்க்கு மிரட்டல் விடுக்கும் தொனியில் பேசிய திமுக எம்.எல்.ஏ மார்கண்டேயனுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.