தமிழ் வளர்ச்சித்துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதி எவ்வளவு? மக்களுக்கு ஏமாற்றத்தை தரும் பட்ஜெட் - தங்கம் தென்னரசு!

வெள்ளை அறிக்கையில் எந்தெந்த விஷயங்களை திமுகவிற்கு எதிராக கூறினார்களோ, பட்ஜெட்டில் அந்த துறைகள் அனைத்திலும் தோல்வி அடைந்துள்ளனர்.
தமிழ் வளர்ச்சித்துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதி எவ்வளவு? மக்களுக்கு ஏமாற்றத்தை தரும் பட்ஜெட் - தங்கம் தென்னரசு!
Published on

தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல் தொடர்பாக முன்னாள் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது;

“தவெக அரசின் தேர்தல் வாக்குறுதிகள் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை என்பதை மக்கள் நன்கு அறிவர்.

தமிழ்நாட்டின் ரூ.10 லட்சம் கடன் சுமையை திமுகதான் ஏற்படுத்தியதாக ஒரு மாயத்தோற்றத்தை தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்யும்போதே நிதியமைச்சர் ஏற்படுத்த முயன்றார். நான் அப்போதே கடன் வாங்குவதற்கான அளவுகோல்களை விளக்கியிருந்தேன்.

தவெக அரசு 5 ஆண்டுகளை நிறைவு செய்யும் போது அரசின் கடன் ரூ.20 லட்சம் கோடியாக உயரும் என நான் அப்போது கூறியிருந்தேன்.

இன்று பேட்டியளித்த நிதித்துறை செயலாளர், கடன் வாங்குவது அதிகரிக்கும் என ஒப்புதல் வாக்குமூலமாக கொடுத்துள்ளார். ரூ.1 லட்சத்து 22 ஆயிரம் கோடி இந்த ஆண்டு நிகர கடன் வாங்கியுள்ளனர். இதே அளவு சென்றால் அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.10 லட்சம் கோடி தவெக அரசு கடனாக வாங்குவார்கள்.

நாங்கள் ஆட்சியை விட்டு போகும்போது ரூ.1 லட்சம் நிகர கடன்தொகை வாங்கினோம். இப்போது அவர்கள் கூடுதலாக ரூ.22 ஆயிரம் கோடி வாங்கியுள்ளார்கள். ரூ.7000 ஆயிரம் கோடி வருவாய் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

மூலதனச் செலவுகளையே திமுக செய்யாததைப் போல ஒரு தோற்றத்தை வெள்ளை அறிக்கை வெளியீட்டில் அமைச்சர் கூறியிருந்தார். ஆனால், திமுகவின் இடைக்கால பட்ஜெட்டில் மூலதன செலவுகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகை 59,662 கோடி. தற்போதைய பட்ஜெட்டில் மூலதனச் செலவிற்கு ரூ.56,985 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. சுமார் ரூ.3000 கோடி குறைக்கப்பட்டுள்ளது.

திமுக செல்லும் வேளையில் மாநில வரி வருவாய் ரூ. 2 லட்சத்தி 29 ஆயிரம். இப்போது ரூ.2 லட்சத்தி 26 ஆயிரம் கோடி. அதிலும் ரூ.3000 கோடி ரூபாய் குறைவாக காட்டுகிறார்கள். வெள்ளை அறிக்கையில் எந்தெந்த விஷயங்களை திமுகவிற்கு எதிராக கூறினார்களோ, பட்ஜெட்டில் அந்த துறைகள் அனைத்திலும் தோல்வி அடைந்துள்ளனர்.

திமுக திட்டங்களுக்கு முலாம் பூசப்பட்டிருக்கிறது. தமிழ் வளர்ச்சித்துறைக்கு எவ்வளவு நிதி என்றுக்கூட அறிவிக்கவில்லை. தொல்லியல் துறைக்கு ரூ.1 கோடி கொடுத்துள்ளார்கள். அதைவைத்து என்ன செய்யமுடியும்?

டெல்டா மாவட்டங்களில் தடுப்பணைகளை உருவாக்கப் போவதாக அறிவித்துள்ளனர். ஆனால் அதற்கு சொற்ப நிதியினை ஒதுக்கியுள்ளனர். இதுதான் நிலைமை. பள்ளிக்கல்வித்துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதி குறைக்கப்பட்டுள்ளது.” என தெரிவித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com