

தமிழ்நாட்டில் புதிதாக பொறுப்பேற்றுள்ள தவெக அரசு, தொழில் வளத்தைப் பெருக்குவதில் ஆர்வம் காட்டாவிடில் மாநிலத்தின் பொருளாதாரம் எப்படி உயரும்? என அமமுக தலைவர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அவர்.,
“தூத்துக்குடியில் 29 ஆயிரம் கோடி ரூபாய் அளவில் முதலீடு செய்வதற்காக கடந்த ஆட்சியில் தமிழ்நாடு அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டிருந்த Mazagon Dock Shipbuilders Limited (MDL) எனும் நிறுவனம் தற்போது ஆந்திர மாநில அரசுடன் ஒப்பந்தம் போட்டிருப்பதாக நாளிதழ்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த கவலையைத் தருகிறது.
பன்னாட்டுத் தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள் தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் தொழில்துறை அமைச்சரை சந்தித்து பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்களைக் கையெழுத்திடுவதாக இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ்கள் வருகிறதே தவிர, ஆக்கப்பூர்வமான எந்தவொரு ஒப்பந்தங்கள் கையெழுத்தானதாகவோ, அதனால் எந்தவித முதலீடுகளும் வேலை வாய்ப்புகளும் உருவானதாகவோ இதுவரை தெரியவில்லை.
தொழில்நுட்ப ரீதியிலும், உட்கட்டமைப்பு வசதிகளிலும் எப்போதுமே இந்தியாவின் தலைசிறந்த மாநிலங்களில் ஒன்றாகத் திகழும் தமிழ்நாட்டில், தொழிலைத் தொடங்க முன்வந்து புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திட்ட பன்னாட்டு நிறுவனங்கள்,
தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் திடீரென அண்டை மாநிலங்களை நோக்கிப் படையெடுப்பதன் மூலம் முதலீடுகளை ஈர்ப்பதிலும், அதன் மூலம் வேலைவாய்ப்புகளைப் பெருக்குவதிலும் தவெக அரசு முனைப்புக்காட்டத் தவறியுள்ளதாக இளைஞர்கள் மத்தியில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
எனவே, தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவதிலும், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பைப் பெருக்குவதிலும் கூடுதல் கவனம் செலுத்தி, புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பதோடு,
ஏற்கனவே தொழில் தொடங்க புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்த நிறுவனங்களையும் தொடர்பு கொண்டு திட்டமிட்ட படி தமிழ்நாட்டில் தொழில் தொடங்கிடுவதை உறுதி செய்திட வேண்டும் என தவெக அரசை வலியுறுத்துகிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.