நீலகிரி மாவட்டத்தில் கொட்டி தீர்த்த கனமழை: பவானி ஆற்றில் பெருக்கெடுத்து ஓடிய தண்ணீர்

கனமழை காரணமாக முக்கிய சாலைகளில் தண்ணீர் ஆறாக ஓடியது.100 அடி கொள்ளளவு கொண்ட பில்லூர் அணையின் நீர்மட்டம் 63.50 அடியாக உள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் கொட்டி தீர்த்த கனமழை: பவானி ஆற்றில் பெருக்கெடுத்து ஓடிய தண்ணீர்
Published on

கோவை:

குளிர்ச்சியான மலை பிரதேசமான நீலகிரியில் கடந்த சில மாதங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது.

இதனால் மாவட்டத்தில் உள்ள நீராதரங்களில் குடிநீர் இருப்பும் குறைய தொடங்கியது. மின் உற்பத்திக்கு ஆதாரமாக உள்ள அணைகளிலும் நீர்மட்டம் குறைந்தது. ஆறுகள், நீரோடைகள், சிறு ஆறுகள் உள்ளிட்டவையும் வறண்ட நிலையில் காட்சியளிக்கிறது.

இந்நிலையில் 3 மாதங்களுக்கு பிறகு நேற்று முன்தினம் இரவு முதல் நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது. நேற்றும் 2-வது நாளாக மழை நீடித்தது.

குன்னூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை கனமழை கொட்டி தீர்த்தது. கனமழை காரணமாக முக்கிய சாலைகளில் தண்ணீர் ஆறாக ஓடியது. பல இடங்களில் தேங்கியும் நின்றது. சில இடங்களில் கடைகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்தது. கடைகளுக்குள் புகுந்த தண்ணீரை இன்று காலை ஊழியர்கள் அகற்றினர்.

தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக அடிக்கடி மின்தடையும் ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். இதேபோல் கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.

இந்த கோடைமழை காரணமாக மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக நிலவி வந்த வெப்பம் தணிந்து, குளிர்ச்சியான கால நிலை நிலவி வருகிறது.

கோவை மாவட்டத்தின் முக்கிய குடிநீர் ஆதாரமாக, பில்லூர் அணை உள்ளது. கடந்த சில மாதங்களாக வெயில் கொளுத்தி வந்ததால், அணையின் நீர்மட்டம் குறைந்தது. இதன் காரணமாக பவானி ஆற்றிலும் தண்ணீர் திறந்து விடப்படுவது குறைந்துவிட்டது.

இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக, கோவை மாவட்டத்தில் உள்ள பில்லூர் அணைக்கு நீர்வர தொடங்கியுள்ளது. அணைக்கு தற்போது வினாடிக்கு 84 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

100 அடி கொள்ளளவு கொண்ட பில்லூர் அணையின் நீர்மட்டம் 63.50 அடியாக உள்ளது. தண்ணீர் வரத்து அதிகரித்ததை தொடர்ந்து பில்லூர் அணையில் இருந்தும் பவானி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இத னால் 2 மாதங்களுக்கு பிறகு பவானி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com