கோடை விடுமுறையில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது: கல்வித்துறை உத்தரவு

அனைத்து பள்ளிகளும் கோடை கால விடுமுறை மற்றும் அரசு பொது விடுமுறை நாட்களில் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகளை தவிர்க்க வேண்டும். மாணவர்களை சிறப்பு வகுப்புகளுக்கு வரவேண்டும் என்று அழுத்தம் தரக்கூடாது.
கோடை விடுமுறையில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது: கல்வித்துறை உத்தரவு
Published on

சென்னை:

பள்ளி மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வு ஏற்கனவே முடிந்துவிட்டது. ஆண்டு இறுதித் தேர்வும் இன்றுடன் (செவ்வாய்க்கிழமை) நிறைவு பெற உள்ளது. இதனைத் தொடர்ந்து அவர்களுக்கு கோடை விடுமுறை தொடங்குகிறது. மற்ற மாணவர்களுக்கு ஏற்கனவே விடுமுறை விடப்பட்டுவிட்டது.

இந்த நிலையில் கோடைகால விடுமுறை நாட்களில் சில பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுவதாகவும், நடத்த திட்டமிட்டு இருப்பதாகவும் கல்வித் துறைக்கு புகார்கள் வந்திருக்கின்றன.

இந்த புகாரைத் தொடர்ந்து கல்வித்துறை, அனைத்து பள்ளிகளுக்கும், மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகளை நடத்தக் கூடாது என்று சுற்றறிக்கையை அனுப்பி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை மற்றும் அரசு பொது விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்துவதாகவும், அது மாணவர்களுக்கு உளவியல் ரீதியாக பாதிப்புகளை ஏற்படுத்துவதாகவும் புகார்கள் பெறப்பட்டு இருக்கிறது.

இந்த புகார் சார்பாக அனைத்து பள்ளிகளும் கோடை கால விடுமுறை மற்றும் அரசு பொது விடுமுறை நாட்களில் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகளை தவிர்க்க வேண்டும். அந்த நாட்களில் மாணவர்களை சிறப்பு வகுப்புகளுக்கு வரவேண்டும் என்று அழுத்தம் தரக்கூடாது.

இந்த உத்தரவை கண்டிப்பாக பள்ளிகள் கடைப்பிடிக்க வேண்டும். தவறும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com