மாநாட்டுக்கு வரும் தலைவர்களை வைத்து அரசியல் செய்ய வேண்டாம்- நயினார் நாகேந்திரன்

மாநாட்டிற்கு இந்தியா மட்டுமல்ல, உலகம் முழுவதிலிருந்தும் யார் வேண்டுமானாலும் வரலாம்.மாநாட்டிற்கு உத்திர பிரதேச முதல்வரும் ஆந்திர துணை முதல்வரும் வரக் கூடாது என்பது முறையா?
மாநாட்டுக்கு வரும் தலைவர்களை வைத்து அரசியல் செய்ய வேண்டாம்- நயினார் நாகேந்திரன்
Published on

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-

தமிழக மக்களிடம் முருக பக்தர்கள் மாநாட்டிற்கான ஆதரவு பல்கி பெருகி வரும் நிலையில் "மாண்புமிகு உத்திர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அவர்களும் மாண்புமிகு ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் அவர்களுக்கும் தமிழகத்திற்கும் என்ன சம்பந்தம்?" என்று கேள்வி எழுப்பியுள்ள இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு அவர்களுக்கு பதிலளிக்க விரும்புகிறேன்.

பார் முழுவதும் அருள்பாளிக்கும் கடவுள் முருகப்பெருமான். அத்தகைய சிறப்பு வாய்ந்த ஆறுமுகனின் பக்தர்கள் உலகெங்குமுள்ள மூலை முடுக்கெல்லாம் இருப்பர். ஆக, ஜூன் 22-ஆம் தேதி நடைபெற இருக்கும் முருக பக்தர்கள் மாநாட்டிற்கு பக்தர்கள் யார் வேண்டுமானாலும் வரலாம். இந்தியா மட்டுமல்ல, உலகம் முழுவதிலிருந்தும் யார் வேண்டுமானாலும் வரலாம்.

பழனியில் நடத்தப்பட்ட முத்தமிழ் முருகன் மாநாட்டிற்கு ஜப்பானில் இருந்து சிலர் கலந்து கொண்டதாக திமுக அரசால் பெருமை பேசப்பட்ட நிலையில், மதுரையில் நடைபெற இருக்கும் முருக பக்தர்கள் மாநாட்டிற்கு உத்திர பிரதேச முதல்வரும் ஆந்திர துணை முதல்வரும் வரக் கூடாது என்பது முறையா?

உண்மையில், மாநாட்டிற்கு ஆந்திர துணை முதல்வர் வரக் கூடாது என்பது அமைச்சரின் நிலைப்பாடா? அல்லது, ஆந்திரா மற்றும் பிற மாநிலங்களில் இருந்து பக்தி மிக்கவர்கள், யாருமே தமிழகத்திற்கு வரக்கூடாது என்று சொல்கிறாரா எனும் சந்தேகம் எழுகிறது.

அரசியலைத் தாண்டி ஆன்மிக ரீதியாக நடத்தப்படும் மாநாட்டில் கூட மாநில அடிப்படையில் பிளவுவாதத்தை தூண்டுவது தவறு. எனவே, பக்திக்கு எந்தவொரு எல்லையும் இல்லை என்பதை உணர்ந்து, மாநாட்டுக்கு வரும் தலைவர்களை வைத்து அரசியல் செய்ய வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com