

கிழக்கு விதர்பா முதல் தமிழக பகுதிகள் வரை தெலுங்கானா மற்றும் ஆந்திரா வழியாக ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது. இதன் காரணமாக இன்று முதல் 25-ந்தேதி வரையிலான 6 நாட்கள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், வட தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழையும், நீலகிரி, ஈரோடு, சேலம், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழையும் பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தமட்டில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, இன்று பிற்பகல் 1 மணிவரை 11 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, ஈரோடு, சிவகங்கை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.