அமோனியா கசிவு: தமிழ்நாட்டில் அனுதினமும் மரண ஓலங்கள்..!- செல்வப்பெருந்தகை

தரமான மற்றும் உயர்தர சிகிச்சையும், உரிய நிவாரணமும் அளிக்கப்படுவதைத் தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.
Congress state leader Selvapperundhagai
Published on

திருவள்ளூர் வாயுக் கசிவு சம்பவம் வேதனையும், சொல்லொணா அதிர்ச்சியும் அளிக்கிறது என்றும் தமிழ்நாட்டில் அனுதினமும் மரண ஓலங்கள் மட்டும் கேட்டுக் கொண்டிருப்பதுதான் யதார்த்தமாகி கொண்டிருக்கிறது. இதை முற்றிலுமாக ஒழிக்க வேண்டியது அரசின் கடமை என்றும் காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.

இதுகுறித்து செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அடுத்துள்ள மஞ்சகரணையில் உள்ள தனியார் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் ஏற்பட்ட அமோனியா வாயு கசிவு காரணமாக, வடமாநிலங்களைச் சேர்ந்த 7 அப்பாவித் தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவமும், 60-க்கும் மேற்பட்டோர் கடுமையான மூச்சுத்திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செய்தியும் மிகுந்த வேதனையையும், சொல்லொணா அதிர்ச்சியையும் அளிக்கிறது.

தொழிற்சாலைகளில் கடைப்பிடிக்கப்பட வேண்டிய அடிப்படை பாதுகாப்பு விதிகளை முறையாகப் பின்பற்றாமல், தொழிலாளர்களின் உயிரோடு விளையாடிய அந்த தனியார் நிறுவனத்தின் அலட்சியப் போக்கிற்கு எனது கடுமையான கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நச்சு வாயுக்கள் பயன்படுத்தப்படும் தொழிற்சாலைகளில், வாயு கசிவைக் கண்டறியும் தானியங்கி எச்சரிக்கை கருவிகளோ அல்லது அவசர காலப் பாதுகாப்பு உபகரணங்களோ இல்லாததே இந்த கோர விபத்திற்கும், இத்தனை உயிர்கள் பறிபோனதற்கும் முக்கியக் காரணமாகத் தெரிகிறது.

தொழிலாளர்நலன் மற்றும் தொழிற்சாலை பாதுகாப்புத்துறை, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் மாவட்ட நிர்வாகம் உரிய முறையில் முறையாக ஆய்வு செய்யவேண்டும்.

தங்கள் வாழ்வாதாரத்திற்காகத் சொந்த மாநிலங்களை விட்டு, இங்கு வந்து உழைத்துக் கொண்டிருந்த வேளையில், நச்சு வாயுவை சுவாசித்து பரிதாபமாக உயிரிழந்த 7 தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும், இந்த விபத்தில் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் தொழிலாளர்கள் அனைவரும் எவ்வித பாதிப்புமின்றி, விரைவில் முழு உடல்நலம் பெற விரும்புகிறேன். அவர்களுக்குத் தரமான மற்றும் உயர்தர சிகிச்சையும், உரிய நிவாரணமும் அளிக்கப்படுவதைத் தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.

இந்த விபத்திற்குக் காரணமான தொழிற்சாலை நிர்வாகத்தின் மீது அலட்சியத்தால் மரணம் விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் காவல்துறை உடனடியாக வழக்குப் பதிவு செய்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகளைக் கைது செய்ய வேண்டும்.

தமிழகத்தில் உள்ள அனைத்து இறால் பதப்படுத்தும் நிறுவனங்கள், குளிர்பதனக் கிடங்குகள் மற்றும் இரசாயனத் தொழிற்சாலைகளில் தொழிலாளர் நல வாரியமும், மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும் இணைந்து உடனடியாகப் பாதுகாப்புத் தணிக்கை நடத்த வேண்டும்.

தமிழ்நாட்டில் அனுதினமும் மரண ஓலங்கள் மட்டும் கேட்டுக் கொண்டிருப்பதுதான் யதார்த்தமாகி கொண்டிருக்கிறது. இதை முற்றிலுமாக ஒழிக்க வேண்டியது அரசின் கடமையாகும்.

இனிவரும் காலங்களில் இதுபோன்ற மனிதத் தவறுகளால் ஏற்படும் செயற்கையான உயிரிழப்புகளும் தமிழகத்தில் எங்கும் நிகழாத வண்ணம் அரசு கடுமையான சட்ட திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com