

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்மாநில செயலாளர் சண்முகம் ஒரு யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்தார். அதில் இடம் பிடித்துள்ள கருத்துகளை அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளுடனும் சிபிஐ (எம்) மாறி மாறி கூட்டணி வைப்பதும், எதிர்ப்பதும் அரசியல் சூழ்நிலையை பொறுத்தது. தொகுதி உடன்பாடு கொள்வது, இரு தரப்புக்கும் நன்மை, வெற்றி தரும் ஏற்பாடே தவிர- ஒரு கட்சியின் அரசியல் முடிவில், இன்னொரு கட்சிக்கு 'துரோகம்' என்ற வார்த்தைக்கு இடமில்லை.
வெற்றிக்கு பலம் பத்தாததால்தான் கடைசி நேரத்தில் தேமுதிக போன்ற கட்சிகளை திமுக தனது அணியில் சேர்த்தது. எனவே 'எங்களால் நீங்கள் ஜெயித்து, உங்களால் நாங்கள் ஜெயித்தோம்' என்பதே யதார்த்தம். தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றத்திற்கும், மக்களின் விருப்பத்திற்கும் ஏற்பவே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இப்போதைய அரசியல் நிலைப்பாட்டை எடுத்துள்ளது.
கூட்டணியை விட்டு விலகினாலே தாக்கும் திமுக-வினரின் போக்கு தவறானது. உணர்ச்சிவசப்பட்டுப் பேசும் இத்தகைய நபர்களை திமுக தலைமைதான் கட்டுப்படுத்த வேண்டும்.
சித்தாந்த ரீதியாகவும் செயல்பாட்டு ரீதியாகவும் திமுகவையும் அதிமுகவையும் சமமாகக் கருத முடியாது. அதே சமயம், திராவிடக் கட்சிகள் தங்களின் பழைய விழுமியங்களையும் கொள்கைகளையும் தற்காலத்தில் முழுமையாகக் கடைப்பிடிப்பதில்லை. தேர்தல் அரசியலில் ஓட்டு வாங்குவதற்காக அவர்கள் சாதியப் பாகுபாடுகள் மற்றும் ஆணவக் கொலைகளுக்கு எதிராகக் களத்தில் நின்று போராடுவதில்லை. இவ்வாறு தம் கொள்கைகளில் பல சமரசங்களைச் செய்து கொண்டு, தங்களைத் தாழ்த்திக் கொண்டுள்ளனர். வரும் காலத்தில், திமுகவும் அதிமுகவும் இணைந்து ஒரே கட்சியாகச் செயல்பட்டால் கூட ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.
இவ்வாறு சண்முகம் பதிவிட்டுள்ளார்.
திமுகவும் அதிமுகவும் இணைந்து ஒரே கட்சியாகச் செயல்பட்டால் கூட ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை என்ற கருத்து அரசியல் வட்டாரத்தில் பெரும் பேசும்பொருளாகியுள்ளது.
தேர்தல் முடிவுக்குப் பின் அதிமுக- திமுக சேர்ந்து ஆட்சி அமைப்பது போன்ற பேச்சு எழுந்தது. இதனால் கம்யூனிஸ்ட் கட்சிகள் மேலிடம் தவெக-வுக்கு ஆதரவு அளிக்க வலியுறத்தியது. அதன் அடிப்படையில் தமிழக சிபிஐ, சிபிஎம் த.வெ.க. ஆட்சி அமைக்க ஆதரவு கொடுத்தது.
முதலில் நான்தாக் அவர்களை அனுப்பி வைத்தேன் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார். ஆனால், இரண்டு இடதுசாரி கட்சிகளும் நாங்கள் தனிக்கட்சி. எங்களை யாரும் கட்டாயப்படுத்த முடியாது. ஜனாதிபதி ஆட்சி வந்துவிடக் கூடாது என்பதால் ஆதரவு கொடுத்தோம் என்றன. பிறகு, திமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்தன. இதனால் திமுக-வினர் கம்யூனிஸ்ட் கட்சிகள் மீது கடுமையாக விமர்சனத்தை முன்வைத்து வருகின்றனர்.
இதற்கிடையே திமுக ஆதரவுடன் அதிமுக ஆட்சி அமைக்க முயற்சி எடுக்கப்பட்டது என்பதை இரு தரப்பு 2-ம் கட்ட தலைவர்கள் ஏறக்குறை ஒப்புக் கொண்டுள்ளனர். அதில் என்ன தவறு இருக்கிறது என்பது போல் ஆர்.எஸ். பாரதி கூறியிருக்கிறார். தற்போதுள்ள புதிய நிலையில் இப்படி செய்தால் என்ன? என்று 2-ம் கட்ட தலைவர்கள் பேசியிருக்கலாம் என ஆ.ராசா தெரிவித்திருந்தார். இந்த நிலையில்தான் சண்முகம் பேச்சு இவ்வாறு வெளியாகியுள்ளது.
சண்முகம் பேச்சுக்கு திமுக தலைவர்கள் கடுமையான கண்டனத்தை தெரிவித்து வருகிறார்கள்.