

சென்னை சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் அமைச்சர் ராஜேஷ்குமார் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
நீட் வினாத்தாள்கள் கசிவு முறைகேடை கண்டித்து மாநில வாரியாக மாணவர்களிடம் கலந்துரையாடி அவர்களின் கருத்துக்களை ராகுல்காந்தி கேட்டறிந்து வருகிறார்.
அதன்படி ராஜஸ்தான், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் அவர் கலந்துரையாடியபோது பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் திரண்டு கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்கள். தமிழ்நாட்டிலும் இந்த நீட் தேர்வு என்பது சமத்துவம், சமூக நீதி, சுயாட்சிக்கு எதிரானது.
கிராமப்புற மற்றும் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த மாணவர்கள் இந்த தேர்வு முறை அறிமுகப்படுத்தப்பட்ட போதே எதிர்த்தார்கள். முன்பு பள்ளி இறுதித் தேர்வில் எடுக்கும் மதிப்பெண்களின் அடிப்படையில் மருத்துவக் கல்வி உள்ளிட்ட உயர்கல்வியில் மாணவர்கள் சேர்க்கப்பட்டார்கள்.
இப்போது நீட் தேர்வின் காரணமாக கிராமப்புற மாணவர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இந்த தேர்வு முறை தனியாருக்கு சாதகமாகவே அமைந்து உள்ளது. தனியார் பயிற்சி மையங்களில் லட்சக் கணக்கில் பணம் கொடுத்து பயிற்சி பெறுவது சாமானிய மக்களுக்கு சாதாரண விஷயமல்ல.
கிராமப்புற மாணவர்களுக்கும், நகர்ப்புற மாணவர்களுக்கும் வித்தியாசம் இருக்கக் கூடாது. எனவே தான் நாடு தழுவிய அளவில் நீட் தேர்வுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மிகப் பெரிய போராட்டத்தை காங்கிரஸ் கட்சி முன்னெடுத்து உள்ளது.
வினாத்தாள் கசிவு என்பது இந்த ஒரு முறை அல்ல, பலமுறை நடந்து உள்ளது. இந்த முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும். தமிழ்நாட்டிலும் மாணவர்களை ஒருங்கிணைத்து காங்கிரஸ் கட்சி இந்த பிரச்சினைக்காக தொடர்ந்து போராடும்.
தமிழக அரசு நீட் தேர்வு கிராமப்புற மாணவர்களுக்கு எதிரானது என்பதை கவர்னர் உரையின் மூலம் தெளிவாக வெளிப்படுத்தி இருக்கிறது. பேட்டியின்போது பீட்டர் அல்போன்ஸ் கோபண்ணா, சிரஞ்சீவி, எஸ்.ஏ.வாசு, செழியன், காந்திபன் ஆகிய நிர்வாகிகள் உடன் இருந்தனர்.