

தென்தாமரைகுளம்:
அகஸ்தீஸ்வரம் மேலதெருவை சேர்ந்தவர் ஜெகதா (வயது 58). இவரது கணவர் ராதாகிருஷ்ணன் (62), இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். ஜெகதா கன்னியாகுமரி அருகே உள்ள ஒரு அரசு உதவி பெறும் கல்லூரியில் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில் இவர் நேற்று முன்தினம் மதியம் துணிகளை வீட்டில் மொட்டமாடியில் உள்ள கொடியில் காயபோடும்போது தன்னைத்தானே நிலைதடுமாறிமேலே இருந்து கீழே தவறி விழுந்துள்ளார். இதில் அவருக்கு முகத்தில் காயம் ஏற்பட்டு துடி துடித்துள்ளார்.
இதை பார்த்த உறவினர்கள் மற்றும் பக்கத்தில் நின்றவர்கள் அவரை மீட்டு நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
இது குறித்து ராதாகிருஷ்ணன் தென்தாமரைகுளம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெகதா உடலை பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜெகதாவின் மகளுக்கு நாளை திருமணம் நடத்த அனைத்து ஏற்பாடுகளையும் பார்த்துபார்த்து செய்து வந்த நிலையில் திடீரென அவர் பலியானது அனைவரையும் மிகுந்த சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.