

தமிழக முதலமைச்சர் விஜய், இந்தியாவின் மிக முக்கிய சமூகப் போராளியும் தமிழ்நாட்டின் முதல் பெண் மருத்துவருமான டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தனது எக்ஸ் தள பக்கத்தில் வாழ்த்துச் செய்தியைப் பகிர்ந்துள்ளார். அதில், பெண்களின் சமூக முன்னேற்றத்திற்காகவும் ஏழை எளிய மக்களின் நலனுக்காகவும் முத்துலட்சுமி ரெட்டி ஆற்றிய மகத்தான சேவைகளை அவர் நினைவு கூர்ந்துள்ளார்.
முதலமைச்சர் விஜய் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
தமிழ்நாட்டின் முதல் பெண் மருத்துவரும், மெட்ராஸ் மாகாண சட்டமன்ற மேலவைக்கு 1927ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி என்ற பெருமைக்குரியவரும், பெண்களின் கல்வி, உரிமை மற்றும் சமூக முன்னேற்றத்திற்காகவும், ஏழை எளிய மக்களின் நலனுக்காகவும் தன் வாழ்நாளை அர்ப்பணித்தவருமான டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அவர்களின் பிறந்த நாளில் அவரது மகத்தான சேவைகளை நினைவுகூர்ந்து போற்றுகிறேன்!
டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அவர்கள், ஆதரவற்ற பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் புகலிடமாக 'அவ்வை இல்லம்', புற்றுநோயாளிகளின் வாழ்வொளியாக 'அடையாறு புற்றுநோய் நிலையம்' போன்ற மகத்தான நிறுவனங்களை உருவாக்கியதோடு, குழந்தைத் திருமண தடைச்சட்டத்துக்கு வித்திட்ட சமூகப் போராளி ஆவார்.
அவரது உயரிய இலட்சியங்களும், பெண் முன்னேற்ற முன்னெடுப்புகளும், மனிதநேயப் பணிகளும், தன்னலமற்ற அர்ப்பணிப்பும் தலைமுறைகளைக் கடந்து என்றும் தமிழ் மண்ணில் நிலைத்திருக்கும்! என்று கூறியுள்ளார்.