

சென்னையில் இரவு நேர புறநகர் ரெயில்களை நம்பி பயணம் செய்யும் ஆயிரக்கணக்கான பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் ரூ.842 கோடி மதிப்பில் மேம்பாட்டுப் பணிகள் நடந்து வருகின்றன. புதிய இரும்பு நடைமேம்பாலம் உள்ளிட்ட கட்டுமானப் பணிகள் காரணமாக பாதுகாப்பு மற்றும் பணிகள் தடையின்றி நடைபெறுவதற்காக புறநகர் மற்றும் விரைவு ரெயில் சேவைகளில் பல்வேறு மாற்றங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், சென்னையில் இரவு நேர புறநகர் ரெயில்களை நம்பி பயணம் செய்யும் ஆயிரக்கணக்கான பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் நடைபெற்று வரும் மறுசீரமைப்புப் பணிகளால் ஆகஸ்ட் 22-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை சில ரெயில்களின் இயக்கத்தில் தற்காலிக மாற்றங்கள் செய்யப்படுகின்றன.
சென்னை கடற்கரையில் இருந்து வருகிற 22, 24, 25, 26, 27, 28, 29 ஆகிய தேதிகளில் (வார நாட்களில்) இரவு 11:20, 11:40, 11.59 ஆகிய நேரங்களில் புறப்பட்டு தாம்பரம் செல்லும் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது.
சென்னை கடற்கரையில் இருந்து மேற்கண்ட தேதிகளில் அதிகாலை 3.50 மணிக்கு புறப்பட்டு செங்கல்பட்டு செல்லும் மின்சார ரெயில் சென்னை கடற்கரை- தாம்பரம் இடையே பகுதிநேர ரத்து செய்யப்படுகிறது.
சென்னை கடற்கரையில் இருந்து வருகிற 23, 30 ஆகிய தேதிகளில் (ஞாயிற்றுக்கிழமை மட்டும்) இரவு 11.20, 11:40, 11.59 ஆகிய நேரங்களில் புறப்பட்டு தாம்பரம் செல்லும் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது. தாம்பரத்தில் இருந்து மேற்கண்ட தேதிகளில் இரவு 11, 11.40 ஆகிய நேரங்களில் புறப்பட்டு கடற்கரை வரும் மின்சார ரெயில்களும் ரத்து செய்யப்படுகிறது.
சென்னை கடற்கரையில் இருந்து வருகிற 23. 30 ஆகிய தேதிகளில் அதிகாலை 3.50 மணிக்கு புறப்பட்டு செங்கல்பட்டு செல்லும் மின்சார ரெயில் கடற்கரை-தாம்பரம் இடையே பகுதி நேர ரத்து செய்யப்படுகிறது. செங்கல்பட்டில் இருந்து மேற்கண்ட தேதிகளில் இரவு 10.20, 11 ஆகிய நேரங்களில் புறப்பட்டு கடற்கரை வரும் மின்சார ரெயில் தாம்பரம்-கடற்கரை இடையே பகுதி நேர ரத்து செய்யப்படுகிறது.
இந்த மாற்றங்கள் இரவு நேர பணிகளை முடித்து வீடு திரும்புவோர், தாம்பரம் வழித்தட பயணிகள் மற்றும் அதிகாலை ரெயில்களை பயன்படுத்துவோரை பாதிக்கக்கூடும் என்பதால், மாற்றுப் போக்குவரத்து ஏற்பாடுகளை முன்கூட்டியே செய்து கொள்ளுமாறு ரெயில்வே நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
எழும்பூர் ரெயில் நிலைய மேம்பாட்டுப் பணிகளை விரைவாக நிறைவு செய்வதற்காக இந்த தற்காலிக மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது என சென்னை ரெயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.