பிரசவத்தின் போது அலட்சியமாக கர்ப்பிணியின் மலக்குடலை கத்தரித்த விவகாரம்; நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் உத்தரவு

அறுவை சிகிச்சை மூலம் குழந்தையை எடுக்க வேண்டும் என்றும் அதற்கான உபகரணங்கள் வீட்டில் இருப்பதாகவும் கூறி, காலம் கடத்தினார்.தனியார் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை பெற்றார்.
பிரசவத்தின் போது அலட்சியமாக கர்ப்பிணியின் மலக்குடலை கத்தரித்த விவகாரம்; நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் உத்தரவு
Published on

மதுரை:

தென்காசி மாவட்டம் சுரண்டையைச் சேர்ந்த ராஜன், ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

எனது மனைவி கடந்த 2021-ம் ஆண்டில் கர்ப்பிணியாக இருந்தார். அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதால், அதே ஆண்டு நவம்பர் 6-ந் தேதி தென்காசி முடியனூர் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்து சென்றேன். அப்போது அங்கு பணியில் இருந்த அரசு டாக்டர், என் மனைவியை பரிசோதித்தார். சில மணி நேரத்துக்கு பின்பு அறுவை சிகிச்சை மூலம் குழந்தையை எடுக்க வேண்டும் என்றும் அதற்கான உபகரணங்கள் வீட்டில் இருப்பதாகவும் கூறி, காலம் கடத்தினார்.

என் மனைவிக்கு முறையான சிகிச்சை அளிக்கப்படாததால் ரத்தப்போக்கு ஏற்பட்டு, குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தனர். என் மனைவி உடல் நிலை மிக மோசமானதால், அவரை தென்காசி அரசு மருத்துவமனைக்கும் பின்னர் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவ மனையில் சேர்த்து, 60 நாட்கள் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் அவர் குணமாகாததால், தனியார் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை பெற்றார்.

இதனிடையே, ஆரம்ப சுகாதார நிலையத்தில் எனது மனைவிக்கு நடந்த அறுவை சிகிச்சையின் போது தவறுதலாக மலக்குடலை கத்தரித்தது தெரியவந்தது. இதனால் அவர் கடும் அவதிக்கு ஆளானார். ஆரம்ப சுகாதார நிலைய டாக்டரின் அலட்சியத்தால் ஏராளமான பணத்தையும் செலவு செய்து, மன உளைச்சலுக்கு ஆளானோம். எனவே சம்பந்தப்பட்ட டாக்டர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி விக்டோரியா கவுரி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் வக்கீல் கே.ஆர்.பாரதி கண்ணன் ஆஜராகி வாதிட்டார். விசாரணை முடிவில், மனுதாரர் புகார் குறித்து முறையாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com