பிராமணர்களுக்காக விரைவில் தனிக்கட்சி: பாராளுமன்ற தேர்தலில் பலத்தை காட்ட முடிவு- எஸ்.வி.சேகர்

பெயர், கொடி எல்லாம் கிடைத்தவுடன் புதிய கட்சி தொடங்கப்படும்.பாராளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்டு பிராமணர்களின் வாக்குவங்கி என்ன? என்பதை நிரூபித்து காட்ட உள்ளோம்.
பிராமணர்களுக்காக விரைவில் தனிக்கட்சி: பாராளுமன்ற தேர்தலில் பலத்தை காட்ட முடிவு- எஸ்.வி.சேகர்
Published on

சென்னை:

தமிழகத்தில் பிராமணர்களுக்காக விரைவில் புதிய கட்சி தொடங்கப்பட இருப்பதாக பாரதிய ஜனதா கட்சி பிரமுகரும் நடிகருமான எஸ்.வி.சேகர் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டி வருமாறு:-

தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு ஜாதிக்கும் ஏதோ ஒரு பெயரில் கட்சி உள்ளது. அரசியல் அங்கீகாரத்தை பெறும் போது தான் சமுதாயத்துக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும் என்பதை உணர்ந்து இந்த கட்சிகள் எல்லாம் தொடங்கி நடத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் பிராமணர்களுக்காக தமிழகத்தில் விரைவில் புதிய கட்சி தொடங்கப்பட உள்ளது. இது தொடர்பான அனைத்து வேலைகளும் முடிவடைந்து தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்துக்காக அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. பெயர், கொடி எல்லாம் கிடைத்தவுடன் புதிய கட்சி தொடங்கப்படும்.

பிராமணர்களுக்கு அரசியல் அங்கீகாரம் கிடைப்பதற்காகவே இந்த புதிய கட்சி தொடங்கப்படுகிறது. சட்டசபையில் ஒரு பிராமணர் கூட எம்.எல்.ஏ. வாக இல்லை. பிராமணர்களின் புதிய கட்சி தொடங்கப்பட்ட பின்னர் அதில் பல்வேறு பிராமண சமுதாயத்தை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் இணைந்து செயல்பட உள்ளனர்.

அப்போது தான் கட்சிக்கு யார் தலைமை தாங்குவது என்பது தெரியவரும். அதே நேரத்தில் என்னை தலைமை தாங்குவதற்கு அழைத்தால் அதற்கு நான் தயாராகவே உள்ளேன்.

பாராளுமன்ற தேர்தலில் பிராமணர்களை வேட்பாளர்களாக நிறுத்தி பலத்தை காட்டவும் திட்டமிடப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் 45 லட்சம் பிராமணர்கள் உள்ளனர். இவர்களில் அனைவருமே வசதியாண வாழ்க்கையை வாழவில்லை. பிராமணர்களிலும் தினக்கூலிகள் இருக்கிறார்கள். இது போன்ற பிராமணர்களின் நலனுக்காகவே புதிய கட்சி தொடங்கப்படுகிறது. மேடான பகுதிகளையும், பள்ளத்தையும் சரி செய்து சமமாக்குவதே சமூக நீதியாகும். ஆனால் அது போன்ற சமூகநீதி இங்கு இல்லை.

ஆந்திரா,தெலுங்கானா, கர்நாடகாவில் பிராமணர்கள் நலனுக்காக நலவாரியம் செயல்பட்டு வருகிறது. ஆனால் அது போன்று எந்த அமைப்பும் தமிழகத்தில் இல்லை.

வருகிற பாராளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்டு பிராமணர்களின் வாக்குவங்கி என்ன? என்பதை நிரூபித்து காட்ட உள்ளோம்.

அதை வைத்து அடுத்த சட்ட மன்றதேர்தலில் பிராமணர்கள் கட்சி கூட்டணி அமைத்து குறிப்பிட்ட தொகுதிகளில் போட்டியிடவும் திட்டமிட்டுள்ளது.

பிராமணர்கள் கட்சியில் சேர்ந்து பணியாற்றும் நேரத்தில் பிரதமர் மோடியிடம் அது பற்றி எடுத்துச் சொல்லி விட்டு அதன் பிறகே பா.ஜனதாவில் இருந்து வெளியேறுவேன்.

தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி மோடியின் புகழை உயர்த்தி பிடித்து, கட்சியை வளர்க்க முற்படாமல் வீண் விளம்பரங்களை தான் செய்து கொண்டு இருக்கிறது.

இவ்வாறு எஸ்.வி.சேகர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com